மணிப்பூர் பெண் போராளி இரோம் ஷானு ஷர்மிளாவுக்கு கொடைக்கானலில் ஜூலை மாதம் திருமணம் நடக்கிறது.
மணிப்பூர் மாநிலம் இம்பால் நகரில் கடந்த 1972-ம் ஆண்டு பிறந்தவர் இரோம் ஷானு ஷர்மிளா. தனது 28-வது வயதில் தன்னைச் சுற்றி நடந்த சமூக பிரச்சனைகளை கையில் எடுத்து போராடத் தொடங்கினார். குறிப்பாக மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை கண்டித்து காந்திய வழியில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
16 வருடங்களாக போராடிய இவரை மணிப்பூர் அரசு சிறையில் அடைத்தது. சிறைக்குள்ளும் போராட்டத்தை தொடர்ந்து நடத்திய அவர் கடந்த வருடம் தனது போராட்டத்தை கைவிட்டார். அதனைத் தொடர்ந்து மணிப்பூர் மாநில தேர்தலில் தனது மக்கள் எழுச்சி நீதிக் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்டார்.
ஆனால் அவருக்கு 90 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதனால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பிறகு மன அமைதியைத் தேடி கேரளா சென்றார். பின்னர் கடந்த சில நாட்களுக்கு பிறகு கொடைக்கானல் அருகே உள்ள பெருமாள் மலைக்கு வந்தார். அங்கு ஒரு வாடகை வீட்டில் எளிமையான முறையில் தனது நண்பருடன் குடியேறினார்.
அங்கிருந்து உப்புபாறை மெத்து பகுதியில் போதி ஜெண்டா ஆசிரமத்துக்கு தினமும் காலை, மாலை என 2 முறை சென்று தியானத்தில் ஈடுபட்டு வருகிறார். தனக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தானே கடைகளுக்கு சென்று வாங்கி வருகிறார். பெரும்பாலும் பச்சை காய்கறிகளையே வாங்கி உண்கிறார்.
அவரைப்பற்றிய தகவல்களை அறிந்ததும் பெருமாள் மலையைச் சேர்ந்த கிராம மக்கள் அவரை அன்புடன் உபசரித்தனர். மேலும் தினசரி வீட்டுக்கு சென்று நலம் விசாரித்தனர். இரோம் ஷானு ஷர்மிளா தனது நண்பரான தேஸ்மன் கொட்டின்கோவை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த அவரை வரும் ஜூலை மாதத்தில் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கூறினார்.
இரோம் ஷானு ஷர்மிளா மணிப்பூர் மொழி பேசுவதை தேஸ்மன் கொட்டின்கோ ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து மற்றவர்களிடம் கூறினார். கொடைக்கானலில் திருமணம் செய்து கொள்வதற்கான இடம் தேர்வு செய்தது குறித்து இரோம் ஷானு ஷர்மிளா கூறுகையில், இப்பகுதி மிகவும் அமைதியாகவும், இயற்கையான காற்று கிடைக்கக்கூடிய இடமாகவும் உள்ளது. இதனாலேயே கொடைக்கானலை எனது மன அமைதிக்காக தேர்வு செய்தேன். மேலும் எனது நண்பரான தேஸ்மன் கொட்டின்கோவையும் இங்கேயே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளேன்.
இங்குள்ள மக்களின் எளிமையான, உண்மையான அன்பு என்னை நெகிழ வைத்தது என்று தெரிவித்தார்.

