குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தான் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

230 0

குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தான் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சர்வதேச நீதிமன்ற தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூ‌ஷன் ஜாதவ் பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த நிலையில் ராணுவ கோர்ட்டு அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு கூறியிருந்தது. இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக குற்றத்தை குல்பூஷன் ஒப்புக் கொண்டது போன்ற வீடியோவை பாகிஸ்தான் வெளியிட்டது.

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், ஜாதவை மீட்பதற்கு மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வந்தது.

இந்நிலையில் குல்பூஷன் ஜாதவின் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா மனு தாக்கல் செய்தது. இதனை பரிசீலித்த சர்வதேச நீதிமன்றம், ஜாதவுக்கு மரண தண்டனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.

அத்துடன், குல்புஷன் ஜாதவின் மரண தண்டனை தொடர்பாக இந்தியா சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணை மே மாதம் 15-ந்தேதி துவங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே வாதாடுகிறார்.

இந்நிலையில், குல்பூஷன் ஜாதவ் வழக்கில் பாகிஸ்தான் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சர்வதேச நீதிமன்ற தலைவரான நீதிபதி ரோனி ஆப்ரகாம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியாவும் இந்த வழக்கில் முடிவு எடுக்கும் வரை ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நீதிபதி ரோனி ஆப்ரகாம் அவசர தகவல் அனுப்பியுள்ளார்.