கருணாநிதி வைர விழாவில் சோனியா பங்கேற்கிறார்!

347 0

கருணாநிதி வைர விழாவில் பங்கேற்கும் சோனியா காந்தி, ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்துவது குறித்து கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தக்கூடும் என தெரிகிறது.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற வைர விழா அவரது பிறந்த நாளான ஜூன் 3-ந்தேதி வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது.ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் இதற்கான விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.இந்திய அளவில் எதிர்க்கட்சி தலைவர்களை ஓரணியில் திரட்டும் வகையில் முக்கிய தலைவர்களை நேரில் சென்று விழாவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி. டெல்லியில் முக்கிய கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து விழாவுக்கு வருமாறு அழைத்து வருகிறார்.காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியை சந்தித்து பேசியபோது கலைஞரை வாழ்த்துவதற்கு கண்டிப்பாக 3-ந்தேதி சென்னை வருகிறேன் என்று கூறி உள்ளார்.

இதே போல் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார், ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் மற்றும் லல்லு பிரசாத் யாதவ், பரூக் அப்துல்லா உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.இது தவிர கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட அனைத்து மாநில முதல்-மந்திரிகளையும் கருணாநிதியின் விழாவில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர். இதேபோல் அனைத்து கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு வருகிறது.

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமியை சந்தித்து அழைத்துள்ளார்.

ஒவ்வொரு தலைவர்களிட மும் மு.க.ஸ்டாலின் எழுதிய வேண்டுகோள் கடிதத்தை கொடுத்து அழைத்து வருகின்றனர்.தலைவர்களின் வருகையை உறுதி செய்த பின்பு 20-ந்தேதிக்கு பிறகு அழைப்பிதழ் தயார் செய்யப்பட உள்ளது.

சென்னையில் 3-ந்தேதி கூடும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் கோபாலபுரம் சென்று கருணாநிதியை சந்தித்து வாழ்த்தி விட்டு ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.ஜனாதிபதி தேர்தல் ஜூலையில் வர இருப்பதால் எதிர்க்கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்துவது குறித்தும் சோனியாகாந்தி உள்ளிட்ட தலைவர்கள் சென்னையில் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தக்கூடும் என தெரிகிறது.