அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பர் தற்கொலை வழக்கு

241 0

சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரும், அரசு ஒப்பந்ததாரருமான நாமக்கல்லைச் சேர்ந்த சுப்பிரமணியம் தற்கொலை வழக்கு தொடர்பாக புதிய போலீஸ் அதிகாரியான செந்தில் இன்று காலை விசாரணை தொடங்கினார்.

சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நண்பரும், அரசு ஒப்பந்ததாரருமான நாமக்கல்லைச் சேர்ந்த சுப்பிரமணியம் (58) கடந்த 8-ந் தேதி தற்கொலை செய்து கொண்டார்.நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே செவிட்டுரங்கன்பட்டியில் அவரது விவசாய தோட்ட வீட்டில் அவர் இறந்து கிடந்தார். அவர் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தபோது, நாமக்கல் மோகனூர் சாலை ஆசிரியர் குடியிருப்பில் உள்ள இவரது வீட்டிலும் வருமானவரி துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சோதனை நடந்தபோது சுவிட்சர்லாந்து சென்றிருந்த இவர் 20 நாட்களுக்கு முன்பு நாமக்கல் திரும்பினார். 2முறை சென்னையில் உள்ள வருமானவரி துறை அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜரானார். மீண்டும் விசாரணைக்கு செல்ல இருந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதால் அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

அவரை முக்கிய புள்ளிகள் மிரட்டியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. மேலும், வருமானவரி துறை அதிகாரிகள் அப்ரூவர் ஆகும்படி வலியுறுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. ஆனால், அவர் தற்கொலைக்கான உண்மையான காரணம் இதுவரை தெரியவில்லை. அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த கடிதம் மாயமாகிவிட்டது. இதனால் அவர் தற்கொலையில் மர்மம் நீடிக்கிறது.

இந்த நிலையில் அவரது உடல் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.இதுவரை பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாரிடம் வழங்கப்படவில்லை. என்றாலும் பிரேத பரிசோதனையின் போது அவர் வயிற்றில் குருணை மருந்து இருந்தது தெரியவந்தது. அவர் குளிர்பானத்தில் குருணை மருந்தை கலந்து தற்கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ விசாரணை நடத்தி வந்தார்.

சுப்பிரமணியம் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்தார் என்று அவரது மனைவி சாந்தி மற்றும் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார். ஏற்கனவே குடும்பத்தலைவரை இழந்து சோகத்தில் இருக்கும் தங்களிடமே போலீசார் விசாரணை நடத்துவது அந்த குடும்பத்திற்கு பெரிய பாதிப்பாக இருந்தது.

இதைத்தொடர்ந்து விசாரணை அதிகாரி இளங்கோ மாற்றப்பட்டு புதிய விசாரணை அதிகாரியாக நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செந்தில் நியமிக்கப்பட்டார்.

அவர் இன்று காலை விசாரணையை தொடங்கினார். சுப்பிரமணியம் தற்கொலை செய்து கொண்ட செவிட்டுரங்கன்பட்டியில் உள்ள தோட்டத்திற்கு சென்று சுப்பிரமணியம் பிணமாக கிடந்த வீட்டை பார்வையிட்டார். பின்னர் தோட்ட சூப்பர் வைசர் வடிவேல் மற்றும் வேலைக்கார பெண்கள் பாப்பம்மாள், ரத்தினம் அம்மாள் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார். பின்னர் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடமும் பக்கத்து தோட்டத்தில் உள்ளவர்களிடமும் விசாரணை நடத்தினார்.