வியாழக்கிழமை (29) நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைபபுக் குழு கூட்டத்தில் கிளிநொச்சி ஊடகவியலாளர்களின் செயற்பாடுகளுக்கு தடை விதித்தமை மிக மோசமான ஜனநாயக விரோதம். மடியில் கனம் இல்லையெனில் வழியில் பயம் எதற்கு என்பது போல அரசின் செயற்பாடுகளில் நேர்மை இருப்பின் ஏன் ஊடகவியலாளர்களுக்கு தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள கிளிநொச்சி ஊடக அமையம் தாம் இதனை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கிளிநொச்சி ஊடக அமையம் வெள்ளிக்கிழமை (30) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடகவியலாளர்களுக்கான அடையாள அட்டையினை வைத்திருந்த ஊடகவியலாளர்களின் கடமைகளுக்கு கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தடை விதித்திருக்கின்றார். கூட்டம் அரம்பிக்கும் போது ஆரம்ப நிகழ்வுகளை மாத்திரம் வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்குமாறும் தெரிவித்த அமைச்சர் அதன் பின்னர் ஊடகவியலாளர்களின் கடமைகளுக்கு தடை விதித்தார்.
இந்த அரசு அதிகாரத்திற்கு வருவதற்கு முன்னர் வீதிகளில் நின்று ஊடகவியலாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்ததோடு, போராட்டங்களிலும் ஈடுப்பட்டது. அக் காலகட்டங்களில் அதிகாரங்களில் இருந்தவர்களால் ஊடகவியலாளர்களுக்கு எதிராகவும், ஊடக செயற்பாடுகளுக்கு எதிராகவும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை கண்டித்த இன்றை அரச தரப்பினர் தாங்கள் அதிகாரத்திற்கு வந்து குறுகிய காலத்திலேயே எல்லா அரசும் செய்யும் அதே நடவடிக்கைகளை இவர்களும் மேற்கொள்கின்றனர்.
அரசின் செயற்பாடுகளில் உண்மைத்தன்மை, நேர்மை, வெளிப்படைத்தன்மை, இருக்கும் எனில் ஏன் ஊடகங்களை கண்டு அச்சம் கொள்ள வேண்டும்? அரசு மக்களுக்கான அரசு எனில், மக்களுக்காக வெளிப்படையாக செயற்படும் அரசு எனில் ஏன் ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்களில் ஊடகவியாளர்களின் கடமைகளுக்கு தடை விதிக்க வேண்டும்? மடியில் கனம் இல்லை எனில் வழியில் பயம் எதற்கு என்பது போல தேசிய மக்கள் சகதி அரசு மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டங்களில் நேர்மைத்தன்மையுடன் நடந்துகொள்கிறது என்றால் ஊடகவியலாளர்களின் கடமைகளுக்கு தடை விதிக்காது இருக்க வேண்டும். மாறாக எதிர் காலத்திலும் ஊடகவியலாளர்கள் தொடர்பில் அரசு இவ்வாறு நடந்து கொண்டால் நாம் அதற்கு எதிராக போராட்டங்களில் ஈடுப்படுவோம் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

