“பாணந்துறை சுத்தா”வின் போதைப்பொருட்களை வேனில் கடத்திய தம்பதி கைது

73 0

துபாயில் உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான “பாணந்துறை சுத்தா” என்பவருக்குச் சொந்தமான போதைப்பொருட்களை வேனில் கடத்திய தம்பதி ஒன்று களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் பாணந்துறை பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த வேன் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

50 வயதுடைய கணவரும் 48 வயதுடைய மனைவியுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து 50 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளும் 60 ஆயிரம் ரூபா பணமும், 2 கையடக்கத் தொலைபேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்ட தம்பதி “பாணந்துறை சுத்தா” என்பவருக்குச் சொந்தமான போதைப்பொருட்களை பாணந்துறை மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் விற்பனை செய்து வருவதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.