கொள்கை ரீதியான தீர்மானத்துக்கு முரணான கோரிக்கைகளை முன்வைக்கும் தொகுதி அமைப்பாளர்கள்

54 0

தொகுதி அமைப்பாளர் பதவிலிருந்து விலகியோர் கட்சியின் கொள்கை ரீதியான தீர்மானத்துக்கு முரணான கோரிக்கைகளையே முன்வைக்கின்றனர். அவற்றை ஒருபோதும் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. எந்தவொரு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு நாம் கட்சி தலைவருடன் நிற்போம் என பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்தார்.

திங்கட்கிழமை (26) கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் பெற்றுக் கொண்ட வாக்குகளின் அடிப்படையில் பட்டியலிலுள்ளவர்களை நியமிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளது. ஏனைய கட்சிகளும் இந்த தீர்மானத்தையே எடுத்துள்ளன. தொகுதி அமைப்பாளர்கள் கட்சியின் தீர்மானத்தை ஏற்று அதன்படி நடக்க வேண்டும்.

கட்சி தலைவரது தீர்மானமே இறுதி தீர்மானமாகும். அதனை நிராகரிப்பதற்கு எமக்கு உரிமை இல்லை. கட்சி தலைவரது தீர்மானத்துக்கமையவே நாம் செயற்படுவோம் என்பதை தொகுதி அமைப்பாளர்கள் மக்களுக்கு காண்பிக்க வேண்டும். பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியிலும் கட்சி தலைவரைப் பாதுகாப்பதற்காக நாம் முன்னின்று செயற்படுவோம்.

தொகுதி அமைப்பாளர் பதவிலிருந்து விலகியோர் கட்சியின் கொள்கை ரீதியான தீர்மானத்துக்கு முரணான கோரிக்கைகளையே முன்வைக்கின்றனர். அவற்றை ஒருபோதும் எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது. கட்சிக்குள் ஒழுக்கத்துடன் செயற்பட வேண்டும். எந்தவொரு பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதற்கு நாம் கட்சி தலைவருடன் நிற்போம்.

பதவி விலகிய தொகுதி அமைப்பாளர்களை சந்தித்து அவர்களை மீண்டும் பதவிகளில் நியமித்து, பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு காணப்படும். எதிர்க்கட்சிகள் இணைந்து உள்ளுராட்சிமன்றங்களில் ஆட்சியமைப்போம். அவற்றை நிர்வகித்துச் செல்வதற்கு அரசாங்கத்தின் ஒத்துழைப்பு தேவையில்லை என்றார்.