இலங்கைக்கு நியூஸிலாந்து பிரதி பிரதமர் பாராட்டு

68 0

பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் நிபந்தனைகளுக்கு இணங்கி, அதற்கு விண்ணப்பித்துள்ளமைக்காக இலங்கையைப் பாராட்டிய நியூஸிலாந்தின் பிரதி பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான வின்ஸ்டன் பீற்றர்ஸ், இருநாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நிலவிவரும் நல்லுறவை மேலும் வலுப்படுத்தே தனது விஜயத்தின் பிரதான நோக்கமாக அமைந்திருப்பதாகத் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்திருக்கும் நியூஸிலாந்தின் பிரதி பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான வின்ஸ்டன் பீற்றர்ஸுக்கும், வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கும் இடையிலான சந்திப்பை அடுத்து திங்கட்கிழமை (26) வெளிவிவகார அமைச்சில் அவர்களது கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெற்றது.

அச்சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட நியூஸிலாந்தின் பிரதி பிரதமர் வின்ஸ்டன் பீற்றர்ஸ், பிராந்திய பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் நிபந்தனைகளுக்கு இலங்கை இணங்கி, அதற்கு விண்ணப்பித்துள்ளமையைப் பாராட்டினார்.

அதேவேளை தனக்கும் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்துக்கும் இடையிலான சந்திப்பின்போது இலங்கையில் இயங்கிவரும் நியூஸிலாந்து நிறுவனங்களுக்கான முதலீட்டு வாய்ப்புக்கள் மற்றும் இருநாடுகளினதும் பொதுவான அக்கறைக்குரிய பல்வேறு விடயங்கள் பற்றிக் கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேபோன்று ‘நியூஸிலாந்துக்கும் இலங்கைக்கும் இடையில் பல வருடகாலமாகப் பேணப்பட்டுவரும் நல்லுறவானது நலிவுற்ற சமூகப்பிரிவினரின் மீண்டெழும் தன்மையை வலுப்படுத்தல், உணவுப்பாதுகாப்பை மேம்படுத்தல் மற்றும் இயற்கை அனர்த்தங்களின் போதான செயற்திறன்மிக்க துலங்கலை ஊக்குவித்தல் ஆகியவற்றை இலக்காகக்கொண்டு அபிவிருத்திசார் ஒத்துழைப்பை மையப்படுத்தியதாக அமைந்திருக்கின்றது’ எனச் சுட்டிக்காட்டிய அவர், தனது இவ்விஜயமானது இருநாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் பலப்படுத்துவதை நோக்காகக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.

‘அத்தகைய பரஸ்பர ஒத்துழைப்புக்களின் ஓரங்கமாக நிலையான நீர் மற்றும் வாழ்வாதார செயற்திட்டத்தை நாம் ஒன்றிணைந்து முன்னெடுக்கவிருப்பதுடன், அச்செயற்திட்டம் விவசாய நடவடிக்கைகளுக்கும், குடும்பங்களின் சுகாதாரம் மற்றும் வருமானத்தை வலுப்படுத்துவதற்கும் பங்களிப்புச்செய்யும்’ என்றும் நியூஸிலாந்து பிரதி பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அத்தோடு, ‘பாதுகாப்புத்துறையைப் பொறுத்தமட்டில் மிகவும் சவால் மிகுந்ததாகக் காணப்படும் உலகளாவிய நிலைவரங்கள் தொடர்பில் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டதோடு, இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் நிலகின்ற ஒன்றுக்கொன்று தொடர்புடைய அபிவிருத்தி, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு சார்ந்த சவால்கள் குறித்தம் கலந்துரையாடினோம்’ எனவும் அவர் தெரிவித்தார்.  அதுமாத்திரமன்றி குடியகல்வு, சுங்கம், பொலிஸ் மற்றும் பாதுகாப்பு ஆகிய விடயங்களில் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பைத் தொடர்ந்து பேணுவதற்கு இதன்போது தாம் இணங்கியதாகவும் அவர் அறிவித்தார்.

மேலும், ‘இலங்கையில் அதிகரித்துவரும் நியூஸிலாந்து நிறுவனங்களின் முதலீடுகள் மற்றும் இலங்கையில் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான பங்காளிகளைத் தேடும் நியூஸிலாந்து நிறுவனங்கள் பற்றியும் கலந்துரையாடினோம். இவற்றில் பெரும்பாலான கூட்டிணைவுகள் இலங்கையின் சுற்றுலா, விவசாயம் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளுக்கு வலுவான பங்களிப்பினை வழங்கும். அதேபோன்று உணவுப்பாதுகாப்பு விடயத்தில் அரசாங்கங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்தும் இதன்போது ஆராய்ந்தோம்’ எனவும் நியூஸிலாந்து பிரதி பிரதமர் தெரிவித்தார்.