சட்டமியற்றும் செயற்பாடுகளை திறனாக முன்னெடுத்து, நல்லாட்சியை நிலைநிறுத்துவதற்காக, பாராளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வைக் குழுக்கள் தேவையான அறிவும் கருவிகளும் கொண்டிருப்பது இன்றியமையாத ஒன்றாகும் என்று சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் கடந்த 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் நடைபெற்ற இரண்டு நாள் கருத்தரங்கின் முதல்நாளில் உரையாற்றிய அவர், சட்டமியற்றும் செயல்முறைகள் தொடர்பான அறிவைப் பெறுவதற்கான வழிவகைகள் குறித்து துறைசார் குழுக்களின் உறுப்பினர்களுக்கு இந்தக் கருத்தரங்கு உதவும் எனத் தெரிவித்தார்.
இந்த கருத்தரங்கு, சர்வதேச அமைதி மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான மேக்ஸ் பிளாங்க் மன்றத்தின் (Max Planck Foundation) ஆதரவுடன், இலங்கை பாராளுமன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
இது குறித்து சபாநாயகர் மேலும் கூறுகையில்,
இந்தக் கருத்தரங்கு மூலம் பெறப்பட்ட அனுபவத்தைப் பயன்படுத்தி, துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் செயற்பாடுகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் வெற்றிகரமாகச் செய்ய முடியும். இலங்கையில் ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதில் தொடர்ந்து ஆதரவளித்து வரும் சர்வதேச அமைதி மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான மேக்ஸ் பிளாங்க் மன்றத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சபாநாயகர் சட்டத்தின் ஆட்சி மற்றும் நல்லாட்சியை மேம்படுத்துவதில் அவர்களின் அர்ப்பணிப்பு இலங்கை பாராளுமன்றத்தின் திறனைக் கட்டியெழுப்புவதற்கு உதவியுள்ளது என்றார்.
இந்தக் கருத்தரங்கில் ஜெனோவா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் என்ரிகோ அல்பனேசி, மேக்ஸ் பிளாங்க் மன்றத்தின் ஆராய்ச்சி உதவியாளர் பிரவீன் சாக்கோ நினன் மற்றும் மேக்ஸ் பிளாங்க் மன்றத்தின் சட்ட ஆலோசகர் மெத்மினி விஜேசிங்க ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர்.
கருத்தரங்கின் ஆரம்ப உரையை நிகழ்த்திய மேக்ஸ் பிளாங்க் மன்றத்தின் ஆராய்ச்சி உதவியாளர் பிரவீன் சாக்கோ நினன்,
சட்டமன்ற பணிகளுக்கான நுட்பங்கள், சட்டமூலங்களை மதிப்பாய்வு செய்யும் முறை, தரநிலைகள் ஆகியவற்றைப் பற்றிய விளக்கங்களை வழங்கினார். பேராசிரியர் என்ரிகோ அல்பனேசி, சட்டத்தின் ஆட்சி தொடர்பாக சட்டமூலங்களை எவ்வாறு பரிசீலிக்கலாம் என்பதையும், அதற்கான வழிகாட்டிகள், விதிகள் மற்றும் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு விளக்கினார்.
இந்த நிகழ்வில் எதிர்க்கட்சி முதற்கோலாசான் கயந்த கருணாதிலக, பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளர் எம். ஜயலத் பெரேரா உள்ளிட்ட அதிகாரிகளும், பாராளுமன்ற சபை முதல்வர் அலுவலகம், அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அலுவலகம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் ஆகியவற்றின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.










