ஒலுவில் துறைமுகம் கடற்படைத் தளமாகின்றதா?

254 0

ஒலுவில் துறைமுகம் தற்போது நட்டத்தில் இயங்குவதாகவும், பராமரிப்புச் செலவு அதிகரித்துள்ளதாகவும் வருமானம் குறைந்து காணப்படுவதாகவும் அதனால் அந்த துறைமுகத்தை மூடிவிட்டு அங்கு கடற்படைத் தளம் அமைக்கப்படுவதற்கான முன்னெடுப்புக்கள் நடைபெற்று வருவதாகவும் அறிய வருகின்றன.

அதனால் இந்த துறைமுகம் பற்றிய கட்டுரையை மக்களுக்கு சமர்ப்பணம் செய்கின்றேன்.

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஒலுவில் கடற்கரைப்பகுதி என்பது இயற்கை வளம் கொண்டதும் நல்ல மீன்பிடி வளம் கொண்டதுமான பிரதேசமாகும்.

காலம்சென்ற அமைச்சர் அஷ்ரப், சந்திரிக்காவின் ஆட்சியின் அதிகார உச்சத்தில் இருந்த போது ஒலுலில் பகுதியில் ஒரு மீன்பிடித் துறைமுகம் அமைக்க வேண்டும் என்று அமைச்சரவைத் தீர்மானம் ஒன்று அப்போது நிறைவேற்றப்பட்டிருந்தன.

அந்த அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைவாக மஹிந்த ஆட்சியில் ஒலுவில் துறைமுக கட்டுமானப் பணிகளில் அரசு அப்போது ஈடுபட்டு வந்தது. அதன் பிற்பாடு ஒலுவில் துறைமுகத்தில் 100 பேர் கொண்ட கடற்படையினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.

ஆனால் ஒலுவில் பகுதியில் துறைமுகம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லையென்று துறைசார் அறிக்கைள் அப்போது வழங்கப்பட்டுள்ளதாக அறிய வருகின்றது.

ஒலுவில் துறைமுகம் அமைக்கும் அஷ்ரப்பின் திட்டத்திற்கு பின்னர்தான் துறைசார் அறிக்கைகள் கோரப்பட்டுள்ளது. அதாவது அமைச்சரவை தீர்மானத்திற்கு முன்னர் துறைசார் அறிக்கைகள் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவசரப்பட்டு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விட்டது.

அஷ்ரப்பின் ஒலுவில் துறைமுகத் திட்டம் வெளியான போது மு.கா. ஆரம்ப கர்த்தாக்களில் முக்கிய வகிப்பு கொண்ட அக்கரைப்பற்று சேகு இஸ்ஸதீன் அப்போது தனது கருத்தை மிகத் தெளிவாக முன்வைத்தார்.

அதாவது, ஒலுவில் துறைமுகம் சாத்தியமா, சாத்தியமில்லையா? என்பதற்கு அப்பால் அது சிங்கள குடியேற்றத்திற்கும் சிங்கள ஆதிக்கத்திற்கும் ஏதுவாக அமைந்து விடும். அதனால் அங்கு துறைமுகம் அமைப்பதை முற்றாக முஸ்லிம்கள் எதிர்க்க வேண்டும் என்று பகிரங்கமாக எதிர்த்திருந்தார்.

ஆனால் அதை அப்போது யாரும் கண்டு கொள்ளவில்லை. ஒலுவில் மக்களுக்கும் அப்போது அது செவிடன் காதில் ஊதிய சங்கு போன்று இருந்தது. ஆனால் இன்று அதன் தாக்கத்தை அனுபவிப்பது ஒலுவில் மக்கள்தான்.

கடலரிப்பு பற்றிய எச்சரிக்கை அறிக்கை

இது ஒருபுறமிருக்க கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திணைக்கள அறிக்கையில் சுற்றாடல் மதிப்பீட்டு அறிக்கையின்படி உயர் கடலரிப்பு பாதிப்புக்கள் சம்பந்தமாக மிகத் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாம்.

அவ்வறிக்கையில், இந்த துறைமுகத்தின் வடபகுதியில் இருந்து தென்பகுதி நோக்கி 2.5 கி.மீ. கடலரிப்பு உண்டாகும் என்றும் வடபகுதி நோக்கி 2.5 கி.மீ. கடலரிப்பு ஏற்படும் என்றும் ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாம்.

இந்த அபாய அறிக்கையுடன் சில நிபந்தனைகள் அடங்கிய அறிக்கையை துறைமுக அதிகார சபைக்கு கரையோரம் பேணல் திணைக்களம் ஒப்படைத்துள்ளது.

அவ்வறிக்கைளில், ஒன்று கடலரிப்பு ஏற்படும் என்றும் அதன் பாதிப்புகளுக்கும் விளைவுகளுக்கும் எவ்வகையிலும் கரையோர திணைக்களம் பொறுப்பல்ல என்றும் அந்த அறிக்கையில் மிகத் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

அதாவது ஒலுவில் துறைமுகம் அமைப்பதற்கான அனுமதி வழங்கலில் கரையோரம் பேணல் திணைக்களம் சாதக, பாதக நிலைமைகளை எடுத்துரைத்து நிபந்தனையின் அடிப்படையில் அனுமதி அளித்துள்ளது.

அண்மையில் திடீரென்று ஏற்பட்ட மிகவும் மோசமான கடலெரிப்பை தடுப்பதற்காக கரையோரம் பேணல் திணைக்களம் 1.75 கோடி ரூபாவுக்கு தடுப்பு வேலி அமைத்துக் கொடுத்துள்ளது. இதன் மூலமாக ஒலுவில் மக்களின் கடலரிப்புக்கு நிரந்தர தீர்வு கிடைத்துள்ளது.

மீனவர்களின் பிரச்சினையும் ஆர்ப்பாட்டமும்

தற்போது மீனவர்களின் மீன்பிடி இயந்திரப் படகுகள் கடலுக்குள் செல்லமுடியாமல் வள்ளங்கள் செல்லக்கூடிய பாதையை கடல் அலைகள் மூலமாக மண்மூடிவிட்டது. அதனால் மீனவர்களின் இயந்திரப் படகுகள் கடலுக்குள் செல்ல முடியாமல் நாளாந்தம் சொல்லொண்ணா துயரத்துக்குள்ளாகி அவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிப்படைந்துள்ளன.

அமைச்சர் ஹக்கீம் தொட்டு அமைச்சர் றிசாத் வரை மீனவர்கள் சென்று இதற்குத் தீர்வு பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்தும் எவ்விதமான தீர்வும் இன்னும் கிடைத்ததாக இல்லை.

இந்த நிலையில்தான் இந்த துறைமுகம் நட்டத்தில் இயங்கி வருவதனால் இந்த துறைமுகத்தை மூடிவிட அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக மீன்பிடி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

துறைமுகம் மூடப்படுகின்ற போது தானாகவே அது கடற்படைத்தளமாக மாறி விடும். தற்போது பாலமுனை கடற்கரைச் சந்தியில் பொது மக்களின் காணிகளில் கடற்படையினர் முகாம் அமைத்து காவல் காத்து வருகின்றனர்.

காலப்போக்கில் அப்படியே முகாம் விஸ்தரிப்பு என்ற போர்வையில் மக்களின் காணிகளை படையினர் அபகரிப்பார்கள். படையினர் தேவைக்கான காணி என்று வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும்.

வடக்கில் மக்களின் காணிகளை விட்டு படையினர் வெளியேற வேண்டும் என்று மக்கள் போராட்டம் நடத்துவது போன்று ஒலுவில் பாலமுனை மக்கள் போராட்டம் நடத்தும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றன.

வரும்முன் காப்போம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் கரையோரம் பேணல் அமைச்சராக அதிபர் மைத்திரி உள்ளதால், அதிபர் மைத்திரி துறைமுகங்கள் அமைச்சர் மற்றும் மீன்பிடி அமைச்சர் மற்றும் அதிகாரிகளைக் கொண்டு ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கூடி, இது சம்மந்தமான அறிக்கைகள் மற்றும் ஆவணங்களை கொண்டு சென்று இவர்களுக்கு தகுந்த விளக்கம் கொடுத்து, இதன் சாதக பாதகங்களை ஆராய்ந்து இந்த துறைமுகத்தில் நேவித் தளம் அமைப்பதை தடுக்க வேண்டும்.

இந்த விடயத்தில் அமைச்சர் ஹக்கீம் துளியளவும் ஈடுபடமாட்டார். ஹக்கீமை நம்பி ஒலுவில் பாலமுனை மக்கள் மீண்டும் மீண்டும் ஏமாறாமல் ஆக்கபூர்வமான நடவடிக்கையில் இறங்கினால் வரும்முன் காக்கலாம்.

இறக்காமத்தில் மலையேறிய பௌத்த சிலைக்கு ஆளுநரிடம் சென்று முறையிட்ட ஹக்கீம் இந்த விடயத்தில் அம்பாறை அரசாங்க அதிபரிடம் முறையிடுவார்.

துறைமுகத்தை மூடிவிட்டு நேவித் தளம் அமைப்பதில் அரசு உறுதியாகவுள்ளது. இந்த துறைமுகம் என்ற போர்வையில் ஏற்கனவே சேகு இஸ்ஸதீன் சொன்னது போன்று தீகவாவி ஊடாக அட்டாளைச்சேனை பிரதேசம் சிங்கள மயமாக்கும் திட்டம் ஒன்று உள்ளதாம்.

கடந்த காலங்களாக தற்போதைய அம்பாறை அரச அதிபரினால் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் உள்ள அரச காணிகளை அடையாளப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கல்முனை மாவட்ட காணிப் பிரிவல் ஆட்சி உறுதி எழுத வேண்டாம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது அரச காணிகளை யாரும் ஆட்சி உறுதி முடிக்க வேண்டாம் என்று புதிய உத்திரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இங்கு நேவித்தளம் அமைப்பதை தடுக்க வேண்டுமானால் இலாபம் கொண்ட துறைமுகமாக மாற்ற வேண்டும். அதனால் உடனடியாக அதிபர் மைத்திரியிடம் இவைகள் குறித்து விரிவாகப் பேசி காலஅவகாசம் பெற்று ஜப்பான், டென்மார்க், மற்றும் சவூதி ஈரான் நாடுகளிடம் பேசி இந்த துறைமுகத்தை எப்படி இலாபம் ஈட்டும் துறைமுகமாக மாற்றலாம் என்று அறிக்கை பெற்று,

அவைகளை அரசிடம் சமர்ப்பித்து மீன் பிடியில் முன்னணி நாடான ஜப்பான், டென்மார்க் போன்ற நாடுகளிடம் ஒப்பந்தம் செய்து நடைமுறைப்படுத்தினால் இலாபம் பெறும் துறைமுகமாக மாற்றப்படுவதோடு இப்பகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைத்து விடும்.

ஜப்பான்,டென்மார்க் போன்ற நாடுகள் மீன் தேவையில் முன்னணி நாடாகும். மற்றும் அரச செலவில் முஸ்லிம் அரசியல் வியாபாரிகள் இந்த விடயத்தை வைத்து 4-5 நாடுகளுக்கு சுற்றுலா சென்ற மாதிரியும் ஆகிவிடும்.