வித்தியா படுகொலை வழக்கை விசாரிக்க ‘ட்ரயல் அட்பார்’

239 0

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவர் முன்னிலையில் ‘ட்ரயல் அட் பார்’ முறையில் நடத்த சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது என்று அறிய முடியகின்றது. கொழும்பில் இந்த விசாரணையை முன்னெடுக்கவும் யோசனை முன்வைக்க்பபட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

புங்குடுதீவு மாணவி வித்தியா 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற வேளை கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வின் பின்பு படுகொலை செய்யப்பட்டார். மாணவியின் படுகொலையும் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 10ஆம் மற்றும் 12ஆம் சந்தேகநபர்கள் வழக்கிலிருந்து அண்மையில் விடுவிக்கப்பட்டனர்.

கொலைக் குற்றச்சாட்டு விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிவான் மன்றில் நிறைவடைந்து சட்டமா அதிபர் திணைக்களத்திடம் மேலதிக நடவடிக்கைக்காகப் பாரப்படுத்தப்பட்டுள்ளது. படுகொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 பேரும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றின் உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்புக்காக இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அதன்போது சந்தேகநபர்களுக்கு எதிரான குற்றப்பகர்வுப் பத்திரம் ஒரு வாரத்துக்குள் முன்வைக்கப்படும் என்று சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதியால் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் புங்குடுதீவு மாணவி படுகொலை வழக்கின் விசாரணையைa மேல் நீதிமன்ற நீதிபதிகள் மூவரடங்கிய ‘ட்ரயல் அட் பார்’ தீர்ப்பாயம் முன்னிலையில் முன்னெடுக்க சட்டமா அதிபர் திணைக்களம் தீர்மானித்துள்ளது என்று அறிய முடிகின்றது. இந்த விசாரணைகள் கொழும்பில் நடத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

தீர்பாயத்தை நியமிக்குமாறு சட்டமா அதிபரால் கோரப்படுமிடத்து தலைமை நீதியரசரால் அதற்கான மேல் நீதிபதிகள் மூவர் நியமிக்கப்படுவர். அவர்களில் ஒருவர் தீர்பாயத்தின் தலைவராக செயற்படுவார்.