முள்ளிவாய்க்கால் 16ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, நெதர்லாந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நெதர்லாந்து மக்களவை மற்றும் தமிழ் இளையோர் அமைப்பினரால் இன்று ஆம்ஸ்டர்டாமில் டம் பிளேன் என்னும் இடத்தில் நினைவு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
பொதுச்சுடரை மக்களவை நிர்வாகி ரமணன் அவர்கள் ஏற்றிவைக்க ஆரம்பமான நிகழ்வு நெதர்லாந்து தேசியக் கொடியை நெதர்லாந்தின் பெங்க் (PINK) கட்சியில் இருந்து பா(f)பியன் (FABIAN) அவர்கள் ஏற்றிவைத்தார் அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியை இளையோர் அமைப்புப் பொறுப்பாளர் செல்வி துஜானி ஏற்றிவைத்தார்.பின்னர் ஈகைச்சுடரினை மக்களவை நிர்வாகி ரவி அவர்கள் ஏற்றிவைத்தார். மலர்வணக்க நிகழ்வினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயல்பாட்டாளர் பொன்னுத்துரை சசிதரன் மற்றும் பெண்கள் அமைப்பு செயல்பாட்டாளர் சுபா அவர்கள் ஆரம்பித்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் மலர்வணக்கம் செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து ஆரம்பமான நிகழ்வில் தமிழ் இளையோரின் ஓங்கி ஒலித்த முழக்கங்களுடன் மேடை அதிர எம்மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட இன அழிப்பை தமிழிலும் ஆங்கிலத்திலும் நெதர்லாந்து மொழியிலும் உரக்க கூறினார். அதுமட்டுமின்றி எந்த வடிவத்தில் கூறினால் இந்த உலகம் எமது வலியை உணரும் என்று புரிந்தவர்கள் நடனம் மூலமும் அதை வெளிப்பத்தினர்.
தொடர்ந்து அங்கு கூடியிருந்த அனைவரையும் ஒரு புள்ளியில் கொண்டு வந்தது நிறுத்தியது தமிழர் ஒருங்கிணைப்புக்குழு வழங்கிய நாடகம் அதில் மக்கள் பட்ட துன்பம் வேதனை அவலம் என்ன எல்லாம் கண்முன்னே கொண்டு வந்து கூடியிருந்த மக்கள் மனதில் அந்த வேதனையையும் அவர்கள் கண்ணில் கண்ணீரையும் வரவழைத்தது.
தொடர்ந்து எமக்காய் என்றும் குரல்கொடுக்கும் அனா அவர்களின் நெதர்லாந்து உரை என நின்ற இடத்தின் அதிர்வை உணர்ந்தனர் மக்கள்.
இறுதியாக இரு தேசியக் கொடியின் கையேற்றலைத் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் எமது தாரக மந்திரமாம் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்னும் முழக்கத்துடன் முடிவடைந்த நிகழ்வுக்குப் பின்னர் முள்ளிவாய்க்கால் உப்புக் கஞ்சி எல்லோருக்கும் வழங்கப்பட்டது.













































