மூன்று தசாப்தகால யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 16 வருடங்கள் பூர்த்தியாகும் இன்றைய நாளில் தமிழர்கள் புலம்பெயர்ந்துவாழும் அமெரிக்கா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட நாடுகளில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்தகால யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு இன்றைய தினத்துடன் 16 வருடங்கள் பூர்த்தியடையும் நிலையில், வட, கிழக்கு மாகாணங்களில் வழமைபோன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதேவேளை தமிழர் தாயகப்பகுதிகளைப்போன்று தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் பிரிட்டன், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளிலும் இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி ஒட்டாவா தமிழ் சங்கத்தினால் கனடாவின் ஒட்டாவா நகரில் அந்நாட்டு நேரப்படி இன்று மாலை 6.00 – 8.00 மணிவரை தமிழின அழிப்பு நினைவு நாள் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் ஏற்பாட்டில் இன்று இரவு 9.00 மணிக்கு (அமெரிக்க நேரப்படி) நிகழ்நிலை முறைமை ஊடாக தமிழின அழிப்பு நினைவு நாள் நிகழ்வு நடைபெறவுள்ளது.
அதுமாத்திரமன்றி இன்று மாலை 4.30 – 6.00 மணிவரை அமெரிக்காவின் பொன்ட் பார்க் சமூக நிலையத்தில் ஐக்கிய தமிழ் அமெரிக்கர்கள் அமைப்பினால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் பிரித்தானிய தமிழர் பேரவையின் ஒழுங்கமைப்பில் இன்றைய தினம் மாலை 4.00 – 7.00 மணிவரை லண்டன், ட்ரபல்கர் சதுக்கத்தில் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு நாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

