எகிப்து: லிபியாவில் இருந்து பயங்கர ஆயுதங்களை கடத்திவந்த 15 லாரிகள் மீது வான்வழி தாக்குதல்

253 0

எகிப்து நாட்டில் உள்நாட்டு சண்டையில் ஈடுபட்டுவரும் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினருக்காக லிபியாவில் இருந்து பயங்கர ஆயுதங்களை கடத்திவந்த 15 லாரிகள் மீது எகிப்து போர் விமானங்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.

எகிப்தில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபர் முகமது மோர்சி. முப்பதாண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருந்த ஹோஸ்னி முபாரக்கை கடந்த 2012-ம் ஆண்டில் பதவியிலிருந்து இறக்கிவிட்டு அதிபர் பதவியைப் பிடித்த மோர்சியால் ஓராண்டுக்கு மேல் அந்தப் பதவியில் நீடிக்க முடியவில்லை.

எகிப்தின் ராணுவத் தலைவராக இருந்த அப்டெல் சிசி என்பவர் மோர்சியை பதவியிலிருந்து இறக்கி கைது செய்து சிறையிலும் அடைத்தார். அவர்மீது பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

அவருக்குத் துணை புரிந்த முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையை எதிர்நோக்கி காவலில் உள்ளனர். இவர்களில் பலருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் ஒரு பிரிவினர் அரசுக்கு எதிரான ஆயுதப் போராட்டத்திலும் பங்கேற்று வருகின்றனர், அரசுப் படைகளுடன் அடிக்கடி மோதும் இவர்கள் பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்துகின்றனர்.

இந்நிலையில், அண்டை நாடான லிபியாவில் இருந்து  முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தினருக்கு ஏராளமான ஆயுதங்கள் அனுப்பப்படுவதாக எகிப்து நாட்டின் உளவுப்படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து, லிபியா-எகிப்து எல்லைப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டது. அதையும் மீறி லிபியாவில் இருந்து பயங்கர ஆயுதங்களை கடத்திவந்த 15 லாரிகளை எகிப்து விமானப்படை குண்டுகளை வீசி தாக்கி அழித்த வீடியோ காட்சிகளை அந்நாட்டு ஊடகங்கள் இன்று வெளியிட்டு வருகின்றன.