நிலம்மீட்கும் வழிபிறக்கும்!-மா.பு.பாஸ்கரன்.

162 0

இரத்தமும் சதையுமாய்
சகதியாய் வழிந்தோட
இனத்தின் குருத்துகள்
வெடித்துப் பறந்து விழும்
இலவம் பஞ்சான
கொடுமைதனைக் கண்டோமே!
கொடுமையிலும் கொடுமையாக
கஞ்சிக்காய் காத்துநின்ற
பிஞ்சுகளின் உடலங்கள்
சிதறிச் சாய்ந்ததனால்
வெண்மணல் வெளியெங்கும்
செம்மணலாய் போனதன்றோ!
வேடமிடும் உலமிது
வேடிக்கை பார்த்துநிற்க
பேடித்தனமான சிங்கள அரசோ
பொசுபரசுக் குண்டுகளை
கொட்டிக் கொட்டிக்
கொடும் நரபலியாடியதை
நாம் மறந்து வாழ்வதெனில்
நாமென்ன மனிதர்களா!
இனம் வேண்டாம்
மொழி வேண்டாம்
மாந்தனென்று உன்னுக்குள்
வாழுகின்ற உணர்விருந்தால்
கொடுமைக்காய் குரலெழுப்ப
திடலுக்கு நீ வரவேண்டும்!
எமக்கும் சேர்த்தேதான்
எம்மவர்கள் சாய்ந்தார்கள்
சாய்ந்தவர் யாருமங்கு
வாழத்தெரியாத மாந்தரல்ல
தேசத்தின் வாழ்வுதனை
உயிரேந்தி நேசித்த
உள்ளன்பு கொண்டோராய்
உறுதியுடன் நடந்தோரே!
உறுதியுன்னுள் உயருமெனில்
வரும்தடைகள் கடந்திடலாம்
கடந்துசென்று நிமிர்கையிலே
காலமெங்கள் கரம்சேரும்
நீதியெங்கள் வசமாகும்!
வந்தநிலம் தந்தவாழ்வில்
சொந்தநிலம் மறக்கலாமா
சொல்லுறவே நில்லுறவே
நிதானித்து நிமிந்தெழுந்தால்
நிலம்மீட்கும் வழிபிறக்கும்!

மா.பு.பாஸ்கரன்
லண்டவ்
யேர்மனி