பெரும்பான்மை இல்லாவிட்டாலும் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியமைக்க இடமளியுங்கள் – மஞ்சுள கஜநாயக்க

87 0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அதிகூடிய ஆசனங்களுடன் வெற்றி பெற்றுள்ள கட்சிக்கு ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவ்வாறில்லையெனில், 4 ஆண்டுகளுக்கு முரண்பாடுகளும் போராட்டங்களும் தொடருமே தவிர அபிவிருத்திகளுக்கு வாய்ப்பிருக்காது என ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் ஆய்வுகள் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது குறித்து அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.

தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்புக்கமைய ஜூன் 2ஆம் திகதி சபைகள் நிறுவப்பட வேண்டும். அவ்வாறு நிறுவும்போது தனிக் கட்சியாக அதிகூடிய ஆசனங்களுடன் வெற்றி பெற்றுள்ள கட்சிக்கு ஆட்சியமைப்பதற்கு ஏனைய கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

50 சதவீதத்தைப் பெற்றுக்கொள்ளாவிட்டாலும், தனிக்கட்சி ஒன்றிலிருந்து பெரும்பாலான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தால் அந்த கட்சிக்கு சபைகளை நிறுவுவதற்கு வாய்ப்பளிப்பதே சிறப்பாகும். மாறாக எதிர்க்கட்சிகள், சுயாதீன குழுக்கள் கூட்டணியமைத்து சபைகளை நிறுவினால் 4 ஆண்டு காலமும் முரண்பாடுகளிலேயே சென்றுவிடும். அங்கு அபிவிருத்தித் திட்டங்களுக்கு வாய்ப்பிருக்காது.

உள்ளூராட்சி மன்றங்களில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இல்லை. அனைவரும் ஒரு குழுவாக மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். அவ்வாறிருக்கையில் எதற்காக இவ்வாறு முரண்பாடுகள் தோற்றுவிக்கப்படுகின்றன? அரசாங்கத்தை பலவீனப்படுத்த வேண்டுமெனில், ஆட்சியைக் கவிழ்க்க வேண்டுமெனில் அதற்கான நடவடிக்கைகளை பாராளுமன்றத்தினூடாக எடுக்க முடியும்.

ஆனால், உள்ளூராட்சி மன்றங்கள் என்பவை அவ்வாறான நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கானவை அல்ல. எனவே, பெரும்பான்மை இல்லாவிட்டாலும் ஓரளவு வெற்றியைப் பெற்றுள்ள தரப்பினருக்கு ஆட்சியமைப்பதற்கு இடமளிக்குமாறு வலியுறுத்துகின்றோம்.

சுயாதீன குழுவொன்று வெற்றி பெற்றிருந்தாலும் தேசிய மக்கள் சக்தியும், ஐக்கிய மக்கள் சக்தியும் அவர்களுக்கு சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும் என்றார்.