எதிர்க்கட்சிகள் இணைந்து சபைகளை அமைப்பதற்கான முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதற்கு பொதுஜன ஐக்கிய முன்னணியாக நாம் தயாராக இருக்கின்றோம். இது குறித்து விரைவில் சகல எதிர்க்கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பு – பிளவர் வீதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் எதிர்க்கட்சிகளுக்கு இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அரசாங்கம் 23 இலட்சம் வாக்குகளை இழந்துள்ளது. வெற்றி பெற்றுள்ளவற்றில் கூட 50 சதவீதமான உள்ளூராட்சி மன்றங்களில் அரசாங்கத்தால் ஆட்சியமைக்க முடியாது. அவற்றில் எதிர்க்கட்சிகளுக்கே அதிகாரம் கிடைத்துள்ளது.
இது தொடர்பில் கட்சி செயலாளர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தையொன்றை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் இணைந்து சபைகளை அமைப்பதற்கான முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதற்கு பொதுஜன ஐக்கிய முன்னணியாக நாம் தயாராக இருக்கின்றோம். அதற்கமையவே இம்முறை தேர்தலில் களமிறங்கிய சகல எதிர்க்கட்சிகளும் இந்த சந்திப்பில் பங்கேற்றன.
மக்கள் செய்தியொன்றை வழங்கியிருக்கின்றனர். அரசாங்கம் சபைகளை அமைக்கும்போது அதற்கான பதிலை நாம் வழங்குவோம்.
அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றச் செய்வதற்கு உள்ளூராட்சி மன்றங்களில் எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சியைமைத்து அழுத்தத்தை பிரயோகிப்போம். அதனை விடுத்து அரசாங்கம் தற்போது பயணிக்கும் பாதையில் தொடர்ந்தும் செல்வதற்கு இடமளித்தால் எமக்கு இந்த நாடும் இல்லாமற்போகும் என்றார்.

