தொடர் திருட்டில் ஈடுபட்ட ஆறு சந்தேகநபர்கள் கைது

86 0

தங்க நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை திருடி விற்பனை செய்து வந்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒருவர் உட்பட 6 சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தம்புத்தேகம  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜாங்கனை பகுதியில் வைத்து 14ஆம் திகதி புதன்கிழமை பொலிஸார் முன்னெடுத்திருந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகமைய மோட்டார் வாகன திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதான சந்தேகநபர்கள் ரம்பகெடியாவ மற்றும் அனுராதபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து குறித்த மோட்டார் சைக்கிள் வஹல்கட பகுதியிலிருந்து திருடப்பட்டது எனவும் குறித்த மோட்டார் சைக்கிளுக்குரிய வாகன இலக்கத்தகடு சாலியபுர பகுதியில் உள்ள வயல்வெளியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து சந்தேகநபர்கள் அநுராதபுரம், கல்குலம் மற்றும் தலாவ ஆகிய பகுதிகளில் 3 மோட்டார் சைக்கிள்களையும் 4 தங்க நகைகளையும் திருடியுள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்தது.

இதையடுத்து சந்தேகநபர்களால் திருடப்பட்ட 2 தங்க நகைகளும் 2 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், கைதானநபர்களுக்கு நகைகளையும் மோட்டார் சைக்கிள்களையும் விற்பனை செய்ய உதவி புரிந்த குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் உட்பட சந்தேகநபர்கள் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

25 தொடக்கம் 42 வயதுக்குட்பட்ட விஜயபுர, பாதிய மாவத்தை, சாலியபுர மற்றும் ராஜாங்கனை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்தோடு பொதுமக்களை அச்சுறுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் கூரிய ஆயுதங்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபர்கள் தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.