பௌத்த பிரதேசமாக காட்சியளிக்கும் கிளிநொச்சி

276 0

இலங்கையின் முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச தமிழ் மக்களை அழித்த போது அவருக்கு பக்க துணையாக அருகில் இருந்தவர் இன்றைய ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன என வடக்கு மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தெரிவித்துள்ளார்.

மகிந்தவின் அழிவுகளிலிருந்தும் விடுபடவும், அந்த அழிவுக்கு நீதியையும், இனப்பிரச்சனைக்குத் தீர்வையும் எதிர்பார்த்து மாற்றத்தை ஏற்படுத்திய தமிழ் மக்கள் இன்றைக்கு எந்த மாற்றத்தையும் காணவில்லை என்பதுடன் இனியும் காணமுடியுமா என்பது சந்தேகமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்கள் அழிக்கப்பட்டதுடன் சகல வழிகளிலும் அடக்கி ஒடுக்கப்பட்டனர். இந்த நிலைமைகள் தொடர்ந்து வந்த நிலையிலையே தமிழ் மக்களும் மாற்றத்தை ஏற்படுத்த துணையாக இருந்தனர். ஆனால் அந்த மாற்றத்தால் தமிழ் மக்களுக்கு எந்த விமோசனமும் கிடைக்கவில்லை.

அதே நிலைமைகள் தான் தற்போது தொடர்கின்றதைக் காணக் கூடியதாக உள்ளது. தமிழ் மக்களின் பிரச்சனைகளான அரசியற் கைதிகள் விடுதலை, காணாமற்போனோர் பிரச்சனை, காணி விடுவிப்புக்கள், இனப்பிரச்சனைக்கான தீர்வு போன்ற விடயங்களில் எதனையும் காணமுடியவில்லை.

குறிப்பாக சிங்களமயமாக்கல், பௌத்தமயமாக்கல் என்பன திட்டமிட்ட வகையில் இந்த அரசாங்கத்தாலும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது வெசாக் பண்டிகைக் கொண்டாட்டம் எனும் பெயரில் இராணுவத்தினர் கிளிநொச்சி முழுவதும் வெசாக் கொடிகளைப் பறக்கவிட்டுள்ளனர்.

கிளிநொச்சிக்கு புதிதாக வருகின்றவர்கள் யாரேனும் பார்க்கின்ற போது சிங்களப் பிரதேசம் போன்றே கிளிநொச்சிப் பிரதேசம் காணப்படும். அவ்வாறு கிளிநொச்சி முழுவதும் வெசாக் கொடிகள் தான் பறக்கின்றன. இராணுவத்தினரைப் பயன்படுத்தி அரசாங்கம் தான் இதனைச் செய்கின்றது என கூறினார்.

தமிழ் மக்களின் போராட்டங்களையோ பிரச்சனைகளையோ கண்டுகொள்ளாமலும் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது மிகுந்த வேதனையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கின்றது.

மைத்திரி – ரணில் தமிழ் மக்களுக்கு எல்லாம் செய்வார்கள் என்று எதிர்பார்த்து மக்களுக்கு தற்போது ஏமாற்றமே ஏற்பட்டிருக்கின்றது. இவ்வாறான நிலையில் தமிழ் தமிழ் மக்கள் இந்த ஆட்சியை நம்ப வேண்டுமா என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.