கொழும்பில் ஐ.ம.ச ஆதரவு அடுத்தவாரம் அறிவிப்போம்

64 0

கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்காக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பது குறித்து இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை. எதிர்வரும் வாரம் உத்தியோகபூர்வமான அறிவிப்பை விடுப்போம் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைப்பது சம்பந்தமாக ஐக்கிய மக்கள் சக்தி வெளிப்படுத்தியிருக்கும் சமிக்ஞை குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பொய் மற்றும் வெறுப்பால் உண்மையை தொடர்ந்து மறைக்க முடியாது என்பதற்கு வெளியாகியுள்ள உள்ளுராட்சிமன்றத்  தேர்தல் முடிவுகள் சிறந்த முடிவாகும். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்க்கட்சியில் இருக்கும் போது கடந்த அரசாங்கங்கள் சாபம் என்று விமர்சித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட ராஜபக்ஷர்கள் மீது பாரிய குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். குறுகிய அரசியல் வெற்றிக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உட்பட தேசிய மக்கள் சக்தியினர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை சட்டத்தின் முன் நிரூபிக்க வேண்டும்.

இதற்கு மக்கள் சிறந்த வாய்ப்பினை அரசாங்கத்துக்கு வழங்கியுள்ளார்கள். ஒன்று  சட்டத்தின் முன் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க வேண்டும் அல்லது குறுகிய அரசியல் இலாபத்துக்காக பொய்யுரைத்தோம் என்பதை அரசாங்கம் மக்கள் மத்தியில் பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்காக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பது குறித்து இதுவரையில் தீர்மானம் எடுக்கவில்லை. நேற்று முன்தினம் கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.

இதன்போது இந்த விடயம் குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இருப்பினும் இறுதி தீர்மானம் ஏதும் எடுக்கப்படவில்லை. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல்குழு கூட்டம் எதிர்வரும் வாரம் கூடவுள்ளது.

இதன்போது இதன்போது எடுக்கப்படும் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு இறுதி தீர்மானம் எடுக்கப்படும். இந்த விடயம் குறித்து கட்சியின் ஆதரவாளர்களின் நிலைப்பாட்டை கோரவுள்ளோம்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு நாடளாவிய ரீதியில் 742 ஆசனங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஆசன பட்டியல் பகிர்வு, உறுப்பினர் நியமனம் குறித்து ஆராய்வதற்கு முன்னாள் அமைச்சர் காமினி லொகுகே தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் பரிந்துரைகள் எதிர்வரும் வாரம் கிடைக்கப்பெறும் என்றார்.