சுற்றுச்சூழல் அபிவிருத்தி என்பது மிகவும் சவாலான விடயம் ; யாழ். மாவட்ட பதில் அரசாங்க அதிபர்

78 0

சுற்றுச்சூழல் அபிவிருத்தி என்பது மிகவும் சவாலான விடயம் என்று யாழ்ப்பாணம் மாவட்ட  பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

இலங்கையின் கொள்கை ஒத்திசைவு மற்றும் சீர்திருத்தத்துக்கான பங்குதாரர் கலந்துரையாடலானது  வெள்ளிக்கிழமை (09) யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்   நடைபெற்றது.

இதன்போது, தலைமையுரையாற்றிய பதில், அரசாங்க அதிபர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் சுற்றுச்சூழல் மற்றும் அபிவிருத்திக்கான நிலையம் கடந்த 25 வருடங்களாக தேசிய மற்றும் சர்வதேச கொள்கை சீர்திருத்த வழிமுறைகளுக்கு பங்களித்துவரும் ஒரு நிறுவனம்.

இந்த நிறுவனமும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் இணைந்து இலங்கையின் தற்போதைய கொள்கைப் போக்குகள், இடைவெளிகளை அடையாளங்கண்டு ஒருங்கிணைந்த முறைமைப்படுத்தப்பட்ட கொள்கைச் சீர்திருத்தச் செயல்பாடுகளை மீள் வடிவமைப்புக்கு பங்களிக்கும் வகையில் தொடர்புடைய பங்குதாரர்களிடமிருந்து ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்தக் கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும், சுற்றுச்சூழல் அபிவிருத்தி என்பது சவாலான விடயம் எனவும், அனைவரும் ஒன்றிணைந்து தமது புலமைகளை இக் கலந்துரையாடலில் முன்வைத்து கொள்கை வகுப்பாளர்களுக்கு அனுசரணையாக செயல்பட வேண்டும் .

இந்தக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. சிறீமோகனனும்,  இணைப்பாளராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விலங்கியல் துறை பேராசிரியர் கே. கஜபதியும் பங்குபற்றியதுடன், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதம பொறியியலாளர், உதவி மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர், பிரதிப் புள்ளிவிவர பணிப்பாளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் தொடர்புடை திணைக்கங்களின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.