கடலில் நடக்கும் திருட்டை இல்லாதொழிக்க கோரி மருதூர் சதுக்கத்தில் திரண்ட மீனவர்கள்

112 0

ஆழ்கடலில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் மீன்களை கடலில் வைத்தே திருடும் கும்பலுக்கு எதிராக நடவடிக்கை  எடுப்பது தொடர்பில் மீனவர்கள் சாய்ந்தமருதில் சனிக்கிழமை (10)  கலந்துரையாடலில் ஈடுப்பட்டனர்.

இந்த கலந்துரையாடலில் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஆழ்கடல் மீனவர் சங்கங்கள், மீனவர் சமாசங்கள், மீனவர் சம்மேளனங்கள், மீனவர்கள் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

கலந்துரையாடலில் ஈடுப்பட்ட மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

சட்டத்தின் பிடியிலிருந்து யாரும் இலகுவாக தப்பிவிட முடியாது. இலங்கை கடற்படை, விசேட அதிரடி படை, பொலிஸாரின் கூட்டு முயற்சியில் இந்த திருட்டு நடவடிக்கைகளை ஒழிக்க விசேட திட்டத்தை செயற்படுத்தி மீனவர்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வை பெற்றுத்தர உறுதியளிப்பதாக பலரும் தெரிவிக்கிறார்கள்.

ஆனால் அவை நடந்த பாடில்லை. பாராளுமன்றத்திலும் கடந்த காலங்களில் எங்களின் பிரச்சினைகள் பேசப்பட்டுள்ளது.

நாங்களும் கடந்த காலங்களில் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், மீன்பிடி திணைக்கள அதிகாரிகள் எனபலரிடமும் பேசியும், கலந்துரையாடியும் எவ்வித ஆக்கபூர்வமான தீர்வும் கிட்டவில்லை.

மட்டக்களப்பு மாவட்ட களுவாஞ்சிகுடி, செட்டிபாளையம், தேத்தாத்தீவு உட்பட அதை அண்டிய பிரதேசங்களிலையே ஆழ்கடல் மீனவர்களின் மீன்கள் திருட்டு போகிறது.

40 (மணிக்கு 40 கிலோமீட்டர்) குதிரை வேகம் கொண்ட சிறியரக மீன்பிடி படகுகளை கொண்டே இந்த திருட்டு சம்பவங்கள் நடாத்தப்பட்டு வருகிறது.

மீன்களுடன் சேர்த்து மீன்பிடி வலைகளையும் வெட்டி எடுத்து செல்வதால் எங்களுக்கு பலத்த நஷ்டங்களும், கஷ்டங்களும் ஏற்படுகிறது. எங்களின் உயிருக்கும் உத்தரவாதமில்லை. பலத்த அச்சுறுத்தலை நாங்கள் தினம் தினம் எதிர்கொள்கிறோம் என்றனர்.

எங்களின் குரல் உரியவர்கள் காதுக்கு சென்று எங்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்காது போனால் அடுத்த கட்ட நடவடிக்கையாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்வதுடன் மிகப்பெரிய எதிர்ப்பு நடவடிக்கையையும், தொழிற்சங்க போராட்டத்தையும் முன்னெடுப்போம் என்றனர்.