திசைக்காட்டியின் பொய் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணையவுள்ளன. 266 உள்ளுராட்சிமன்றங்களில் அரசாங்கம் வெற்றி பெற்றிருந்தாலும் 116 மன்றங்களில் மாத்திரமே ஆட்சியமைக்கக் கூடியளவு பெரும்பான்மை அரசாங்கத்துக்கு காணப்படுகிறது என ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.
ஐ.தே.க. தலைமையகமான சிறிகொத்தாவில் வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பொதுத் தேர்தலை விட உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் அரசாங்கம் 34 சதவீதம் குறைவான வாக்குகளை பெற்றுள்ளது. 266 உள்ளுராட்சிமன்றங்களில் தாம் வெற்றி பெற்றுள்ளதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் அவ் அனைத்திலும் இவர்களால் சபைகளை நிறுவ முடியாது. 116 சபைகளில் மாத்திரமே அரசாங்கத்தால் ஆட்சியமைக்க முடியும்.
மறுபுறம் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சர்வஜன அதிகாரம் உள்ளிட்ட கட்சிகள் கடந்த காலங்களை விட அதிக வாக்குகளைப் பெற்றுள்ளன.
ஐக்கிய தேசிய கட்சி இறுதியாக யானை சின்னத்தில் களமிறங்கிய போது பெற்றுக் கொண்ட வாக்குகளை விட இருமடங்கு அதிக வாக்குகளை இம்முறை பெற்றுள்ளது. இது நூறு சதவீத அதிகரிப்பாகும்.
திசைக்காட்டியின் பொய் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக சகல எதிர்க்கட்சிகளும் ஒன்றிணையவுள்ளன. இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்குமிடையில் மோதல்கள் ஆரம்பித்துள்ளன.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் இவர்கள் இந்தியாவுடன் இரகசிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதனால் ஏற்படப் போகும் அபாயம் குறித்து யாருக்கும் தெரியாது.
இவ்வாறான பிரச்சினைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வியட்நாம் சென்று, தனியார் ஜெட்டில் நாட்டை வந்தடைந்தார்.
மக்களுக்கு இல்லாத எந்தவொரு சிறப்புரிமைகளும் சலுகைகளும் தமக்கு தேவையில்லை எனக் கூறியவர்களே இன்று தனி விமானத்தில் பயணிக்கின்றனர். இவ்வாறான செயற்பாடுகளுக்கே மக்கள் அரசாங்கத்தை புறக்கணித்துள்ளனர் என்றார்.