சீதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கட்டுநாயக்க, 18 ஆவது மைல்கல் பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக சீதுவை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (06) காலை 10.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கட்டுநாயக்க 18 ஆவது மைல்கல் பிரதேசத்தில் சந்தேக நபரொருவர் வன்முறையில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்ய முயன்றுள்ளனர்.
இதன்போது சந்தேக நபர் பொலிஸ் அதிகாரி ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
பின்னர் சந்தேக நபரை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் அதிகாரிகள் சிலர் இணைந்து சந்தேக நபர் மீது துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் சீதுவை விஜயகுமாரதுங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் சீதுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

