நுவரெலியா மாவட்டத்தில் 610,117 பேர் வாக்களிக்கத் தகுதி ; துஷாரி தென்னகோன்

63 0
நுவரெலியா மாவட்டத்திலுள்ள 12 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு 300 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக செவ்வாய்க்கிழமை (06) நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஆறு இலட்சத்து பத்தாயிரத்து நூற்று பதினேழு பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக நுவரெலியா மாவட்டத் தேர்தல் அதிகாரியும் மாவட்டச் செயலாளருமான துஷாரி தென்னகோன் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் துஷாரி தென்னகோன் மேலும் கூறுகையில்,

இந்த முறை நுவரெலியா மாவட்டத்தில் 18,342 தபால் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். வாக்களிப்பதற்காக மாவட்டம் முழுவதும் 540 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

தேர்தல் பணிகளுக்காக 6,352 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்புக்காக சுமார் 1,500 அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 63 அரச வாகனங்களையும் 609 தனியார் வாகனங்களையும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்திலிருந்து 2,485 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர், மேலும் அவர்கள் 80 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் ஒன்பது சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்தவர்கள்.

நுவரெலியா மாநகர சபை, தலவாக்கலை-லிந்துல நகர சபை, ஹட்டன்-டிக்கோயா நகர சபை, ஹங்குரன்கெத்த, வலப்பனை, நுவரெலியா, கொத்மலை, அக்கரப்பத்தனை, கொட்டகலை, நோர்வூட், மஸ்கெலியா மற்றும் அம்பகமுவ ஆகிய பிரதேசங்களிலிருந்து நுவரெலியா மாவட்டத்திற்கு 300 உறுப்பினர்கள் இத்தேர்தலில் தெரிவு செய்யப்படவுள்ளனர் என்றார்.