மாணவியை இந்த நிலைமைக்குள்ளாக்கிய அனைவரும் சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டும்

111 0
டில்ஷி அம்ஷிகா என்ற மாணவிக்கு ஏற்பட்ட நிலைமை எந்தவொரு மாணவிக்கும் இனிமேல் இடம்பெறக்கூடாது என்பதிலும், மாணவியை  இந்த நிலைமைக்குள்ளாக்கிய அனைத்து நபர்களுமே சட்டத்தின் முன்பாக மிக உயர்ந்த அளவில் தண்டிக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் இலங்கை ஆசிரியர் சங்கமானது தொடர்ச்சியாக தனது அவதானத்தை செலுத்தி வருகிறது என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் முகனேஷ்வரி டென்சில் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்ற மாணவி ஒருவர் ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட  சம்பவத்தால் கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி  உயிரை மாய்த்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த சம்பவம் தொடர்பில் ஞாயிற்றுக்கிழமை (04) இலங்கை ஆசிரியர் சங்கத்தில் ஊடக சந்திப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது.

அதில் உயிரை மாய்த்த மாணவியின் பெற்றோர், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்  மற்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் முகனேஷ்வரி டென்சில் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் முகனேஷ்வரி டென்சில் மேலும் தெரிவிக்கையில்,

15 வயதுடைய பாடசாலை மாணவியான டில்ஷி அம்ஷிகாவின் மரணம் ஆசிரியர்கள் மத்தியில் துயரமான சம்பவமாக கருதப்படுகிறது. இவருடை இந்த நிலைக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஐக்கிய நாடுகள் சபை பொதுநலவாயத்தின் உறுப்புரிமைக்கமைய மாணவர்களுக்கு எதிராக 4 வகையான குற்றங்கள் இழைக்கப்படுகின்றன. குறிப்பாக உடல், உள, பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் அண்மைய கணிப்பீடுகள் போன்றன இழைக்கப்படுகின்றன. உயிரிழந்த மாணவிக்கு உள மற்றும் பாலியல் துஷ்பிரயோகங்கள் நடத்திருப்பதாக சாட்சியங்கள் காணப்படுகின்றன.

அந்த வகையில், ஒரு பாடசாலையாக, ஆசிரியராக, சமூகமாக, உறவுகளாக நாம் இந்த மாணவியை காப்பாற்றுவதில் தோல்வி அடைந்திருக்கின்றோம் என்பதே உண்மையாகும். இன்று இந்த மாணவியின் கடந்த கால கல்வி நடவடிக்கையை எடுத்து நோக்குவோமானால், விளையாட்டு உட்பட பல்வேறு துறைகளில் மிகச் சிறந்த மாணவியாக கடந்த 2023 ஆம் ஆண்டு வரைக்கும் செயற்பட்டுள்ளார். மும்மொழி தேர்ச்சியுள்ள மாணவியாகவும் இருந்துள்ளார்.

இவ்வாறானதொரு மாணவி தனது கல்வி நடவடிக்கைகளில் திடீரென மந்த கதியில் சென்று இன்று தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு சென்றுள்ளார் என்றால் இந்த நாட்டில் சட்டங்கள் , அதிகாரங்கள் போன்றன பிழைகளை நியாயப்படுத்துகின்ற வகையிலேயே காணப்படுகின்றதா? என எம்முள் கேள்வி எழுகின்றது.

எனவே, இந்த மாணவிக்கு எதிராக நடைபெற்ற இந்த விடயங்கள் உறுதிப்படுத்தப்படுமாக இருந்தால் இந்த விடயங்கள் தொடர்பாக இலங்கை ஆரிசியர் சங்கமானது தமது மிகுந்த கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது.

இந்த மாணவியை உயிரை மாய்த்துக்கொள்ளத் தூண்டிய சகல மட்டங்களிலும் உள்ள அனைவருமே தண்டனைக்குட்படுத்தப்பட வேண்டியவர்கள் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.

இந்த மாணவி உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன்பாக தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் இந்த மாணவி பகிரங்கமாக அடையாளப்படுத்தப்பட்டு ஆளுமையை வலுவிழக்கச் செய்யும் வகையில் மிகவும் பாராதூரமான வகையில் விமர்சிக்கப்பட்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக இந்த மாணவி தனிமைப்படுத்தப்பட்டு பல விதமான சிக்கல்களை தனித்து எதிர்கொள்ள வேண்டிய மிகச் சவால் மிக்க வாழ்க்கையையே கடந்த சில வாரங்களாக எதிர் கொண்டுள்ளார்.

எனவே இவ்வாறான ஒரு நிலைமை எந்தவொரு மாணவிக்கும் இனிமேல் இடம்பெறக் கூடாது என்பதிலும், மாணவியை  இந்த நிலைமைக்கு ஆளாக்கிய அனைத்து நபர்களுமே சட்டத்தின் முன்பாக மிக உயர்ந்த அளவில் தண்டிக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் இலங்கை ஆசிரியர் சங்கமானது தொடர்ச்சியாக  தனது அவதானத்தை செலுத்தி வருகிறது என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.