மன்னார் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை (06) நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் திங்கட்கிழமை (05) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
மன்னார் மாவட்டத்தில் 91 ஆயிரத்து 373 வாக்காளர்கள் இம்முறை வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 5 உள்ளூராட்சி மன்றங்களில் இருந்தும் 88 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
மன்னார் நகர சபையில் 18 உறுப்பினர்களும் மன்னார் பிரதேச சபையில் 23 உறுப்பினர்களும் நானாட்டான் பிரதேச சபையில் 19 உறுப்பினர்களும் முசலி பிரதேச சபையில் 19 உறுப்பினர்களும் மாந்தை மேற்கு பிரதேச சபையில் 24 உறுப்பினர்களும் உள்ளடங்கலாக கட்சி மற்றும் சுயேட்சைக் குழு சார்பாக 103 உறுப்பினர்கள் போட்டியிடுகின்றனர்.
அவர்களில் மன்னார் நகரசபைக்கு 15 உறுப்பினர்களும், மன்னார் பிரதேச சபைக்கு 20 உறுப்பினர்களும் நானாட்டான் பிரதேச சபைக்கு 16 உறுப்பினர்களும், முசலி பிரதேச சபைக்கு 16 உறுப்பினர்களும் மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு 21 உறுப்பினர்களுமாக மொத்தம் 88 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் 114 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட செயலகத்தில் இருந்து திங்கட்கிழமை (05) வாக்குப் பெட்டிகள் உட்பட அனைத்துப் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
வாக்களிப்பு நிலையம் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு உரிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடாத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் செவ்வாய்க்கிழமை (06) காலை நேரத்துடன் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று பெறுமதியான வாக்குகளை அளிக்க வேண்டும்.
இந்த ஊடக சந்திப்பில் மன்னார் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் கே.முகுந்தனும் கலந்துகொண்டார்.

