அரநாயக்க பகுதியில் 10 கிராம் 400 மில்லிகிராம் கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் எனப்படும் ‘ஐஸ்’ போதைப் பொருளை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரநாயக்க பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று சனிக்கிழமை (03) சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அரநாயக்க பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
டுபாயில் மறைந்திருப்பதாக கூறப்படும் திலினி என்ற போதைப்பொருள் கடத்தல்காரினால் இந்த போதைப்பொருள் நாட்டுக்கு கடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேகநபர் பல குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் எனவும் 40 க்கும் மேற்பட்ட வாகனங்களைத் திருடியது உட்பட பல குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர் எனவும் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், சந்தேகநபர் இன்று ஞாயிற்றுக்கிழமை (04) மாவனெல்லை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதுடன், மேலும் விசாரணைகளுக்காக 48 மணி நேர பொலிஸ் தடுப்புக்காவல் உத்தரவு கோரப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

