அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பில் இருந்து விலகும் மைக் வோல்ட்ஸ், ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதராக நியமிகப்படவுள்ளார்.
யேமனில் கௌத்தி கிளர்ச்சியாளர்களின் நிலைகளைக் குறிவைத்து அமெரிக்கா மேற்கொண்டுவரும் தாக்குதல் தொடர்பாக மைக் வோல்ட்ஸும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்சேத், வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ உள்ளிட்டோரும் ‘சிக்னல்’ என்ற தகவல் தொடர்பு செயலி மூலம் சில வாரங்களுக்கு முன்னர் உரையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, ‘தி அட்லாண்டிக்’ இதழின் தலைமை ஆசிரியர் ஜெஃப்ரி கோல்பர்கும் அந்த உரையாடலில் தவறுதலாக இணைக்கப்பட்டதால், மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் வெளியே கசிந்தன.
இந்த விவகாரம் தொடர்பாக மைக் வோல்ட்ஸ் சர்ச்சையில் சிக்கிய நிலையில், அவர் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதராக மைக் வோல்ட்ஸ் நியமிகப்படவிருப்பதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
மைக் வோல்ட்ஸ் வகித்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பொறுப்புக்கு தற்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் மாா்க்கோ ரூபியோ தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

