பஹல்காம் தாக்குதல் : விசாரணைக்குழு அமைக்க இந்திய உச்சநீதிமன்றம் மறுப்பு

87 0

பஹல்காம் தாக்குதல் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க முடியாதென  இந்திய உச்சநீதிமன்ற தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் கடந்த 22 ஆம் திகதி 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர்.

இதையடுத்து, பாகிஸ்தானுக்கு எதிராக பல அதிரடி நடவடிக்கைகளை இந்திய மத்திய அரசு எடுத்து வருகிறது.

இந்த நிலையில், பஹல்காம் தாக்குதல் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (1)  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், “பஹல்காம் தாக்குதல் குறித்து மத்திய அரசு விசாரித்து வரும் நிலையில் அனைவரும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து இருக்க வேண்டும்.

தற்போதைய நிலையில் இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல. ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனை இருந்தால் உயர்நீதிமன்றத்தை அணுகலாம்.

பஹல்காம் தாக்குதல் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க முடியாது. விசாரணை அமைப்புகளுக்கு மனச்சோர்வை ஏற்படுத்துவது போன்று மனுதாரரில் பொதுநல மனு உள்ளது” என்று தெரிவித்தனர்.

இதனையடுத்து, பொறுப்பற்ற பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளதாக மனுதாரர் பதேஷ் சாஹூவுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.