இந்த நாட்டில் வங்கிகளை யார் கொள்ளையடித்தது, யார் மக்களை படுகொலை செய்தது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவரை சூழ்ந்துள்ளவர்கள் இந்த நாட்டுக்கு என்ன அபிவிருத்தி செய்தார்கள். அவ்வாறு ஏதேனும் செய்திருந்தால் எவராலும் குறிப்பிட முடியுமா என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கேள்வியெழுப்பினார்.
மே தினத்தை முன்னிட்டு நுகேகொட பகுதியில் வியாழக்கிழமை (01) நடைபெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்த போது அனைத்து அபிவிருத்தி திட்டங்களுக்கும், வெளிநாட்டு முதலீடுகளுக்கும் எதிராக மக்கள் விடுதலை முன்னணி தான் எதிர்ப்பு தெரிவித்து அனைத்தையும் தாமதப்படுத்தியது.
இந்த நாட்டில் வங்கிகளை யார் கொள்ளையடித்தது, யார் மக்களை படுகொலை செய்தது.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவரை சூழ்ந்துள்ளவர்கள் இந்த நாட்டுக்கு என்ன அபிவிருத்தி செய்தார்கள். அவ்வாறு ஏதேனும் செய்திருந்தால் எவராலும் குறிப்பிட முடியுமா,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியா மற்றும் சீனாவுடன் ஒன்றிணைந்து அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்ட போது இந்திய ஆக்கிரமிப்பு, சீன கொலனி என்று குற்றச்சாட்டுக்களை முன்வைத்த மக்கள் விடுதலை முன்னணி இன்று இந்தியா மற்றும் சீனாவுக்கு சென்று வெட்கமில்லாமல் ஒப்பந்தங்களை கைச்சாத்திடுகிறது.
தேர்தல் வெற்றிக்காக மக்கள் விடுதலை முன்னணி மக்களிடம் குறிப்பிட்ட பொய் இன்று வெளிப்பட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி என்றால் பொய் மற்றும் வெறுப்பு என்பதை மக்கள் நன்கு விளங்கிக்கொண்டுள்ளார்கள். 2029 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ வெற்றிப்பெறுவார். மக்கள் விடுதலை முன்னணியின் பொய்களுக்கு மக்கள் இனியொருபோதும் இடமளிக்கமாட்டார்கள் என்றார்.

