கொழும்பை சுத்தமான நவீன நகரமாக மாற்றுவோம்

86 0
கொழும்பை சுத்தமான, திறமையான, நவீன நகரமாக மாற்றுவோம் என தேசிய மக்கள் சக்தியின் சார்பில் உள்ளூராட்சி சபை தேர்தலில் கொழும்பு மாநகர சபையின் பம்பலப்பிட்டி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எஸ். பிரேம்குமார் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் பம்பலப்பிட்டி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் எஸ். பிரேம்குமார் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் கொழும்பு மாநகர சபையின் பம்பலப்பிட்டி தொகுதியில் போட்டியிட நான் பரிந்துரைக்கப்பட்டுள்ளேன் என்பதை அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன்.

கடந்த ஆண்டுகளில் இடம்பெற்ற ஊழல்கள் மற்றும் வீழ்ச்சிகள் காரணமாக பொதுமக்களின் நம்பிக்கையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

வெளிப்படைத்தன்மை, சேவை மற்றும் உண்மையான முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளிக்கும் நேரம் இதுவாகும்.

கொழும்பை ஒரு சுத்தமான, திறமையான மற்றும் நவீன நகரமாக மாற்றுவதற்கான விரிவான திட்டங்களை நாம் மேற்கொள்ள உள்ளோம்.

கொழும்பில் சுத்தமான, சிறந்த வீதிகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பொது இடங்கள் ஆகியவை குறித்து நாம் கவனம் செலுத்துகின்றோம்.

கடற்கரைகள் மற்றும் விளையாட்டு பூங்காக்களை நவீனமயமாக்குதல், பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சிகரமான பொழுதுபோக்கு பகுதிகளை உருவாக்குதல், மாற்று போக்குவரத்து வழிகளை உருவாக்குதல், பம்பலப்பிட்டியிலிருந்து பத்தரமுல்ல வரை படகு சேவையை ஆரம்பித்தல், குப்பைகளை அகற்றுதல், பொது சுகாதார வசதிகளை ஏற்பாடு செய்தல், தெரு விளக்குகள்  பொருத்துதல் போன்ற பல நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள உள்ளோம்.

கொழும்பில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே எங்கள் நோக்கம் ஆகும். தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து நேர்மையான திறமையான தலைவர்களை கொண்ட நிர்வாகத்தை வழங்க நான் உறுதியளிக்கிறேன். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து சிறந்த இலங்கையை உருவாக்குவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.