கிளிநொச்சி விவசாயிகளிடமிருந்து உரிய நிதி கையாளல்களின்றி விவசாயிகளிடம் இருந்து அறவிடப்பட்ட பலகோடி ரூபா நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் நீதியான விசாரணை ஒன்றினை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (26) அனுப்பியுள்ள குறித்த கடித்த்தில் கிளிநொச்சி இரணைமடுக்குளத்ததின் கீழ் வாழ்வாதாரத் தொழிலான விவசாயத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளாகிய நாங்கள் போரினால் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாது கடந்த காலங்களில் ஏற்பட்ட இயற்கை அழிவுகள் நோய்த் தாக்கங்கள் என்பவற்றாலும் பெரும் பாதிப்புக்களை எதிர் நோக்கியுள்ளோம்.
இவ்வாறு இருந்தும் ஒவ்வொரு போகத்திலும் மாவட்ட பயிர்செய்கை கூட்டத் தீர்மானங்களின் படி கட்டுப்பணங்களையும் செலுத்தி வருகின்றோம் குறிப்பாக வாய்க்கால் பராமரிப்பு குளத்தின் பராமரிப்பு கமவிதானை கொடுப்பனவுகள் என்பவற்றையும் முறையாக செலுத்தி வருகின்ற போதும் அதற்கான நிதிகளும் குறிப்பிட்ட சில கமக்கார அமைப்புக்களால் கமநல சேவை நிலைய அதிகாரிகளின் துணையுடன் முறைகேடாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் எந்தவிதமான கணக்காய்வுகளும் உரிய திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்படுவதில்லை என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.
இதனை விட இரணைமடுக்குளத்தின் கீழ் செயற்பட்டுவரும் இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனம் என்ற அமைப்பானது கமநல அபிவருத்தி திணைக்களத்தின் கீழ் செயற்பட்டு வருகின்ற போதும் இதுவரை கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தின் கீழ் பதிவு செய்யப்படாமல் அதற்கான நிர்வாகக் கட்டமைப்பு 2017ம் ஆண்டிற்கு பின்னர் புனரமைப்பு செய்யப்படாமலும் இயங்கி வருகின்றது.
அத்துடன் இரணைமடு குளத்தின் கீழ் உள்ள விவசாயிகளிடம் இருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பெரும்போகத்திலும் சிறுபோகத்திலும் ஏக்கர் ஒன்றுக்கு நூறு ரூபா வீதம் குறித்த சம்மேளனத்தினால் தொடர்ச்சியாக அறவிடப்பட்ட பலகோடி ரூபா நிதிக்கு என்ன நடந்துள்ளது என்று தெரியாமலே முறையற்ற விதத்திலே செலவிடப்பட்டிருக்கின்றது.
அத்துடன் கடந்த காலங்களில் அதிகாரிகள் சிலரது ஊழல்களுக்காக ஒப்பந்த வேலைகள் வழங்கப்பட்டு அதன் மூலம் கிடைத்த நிதிக்கும் என்ன நடந்துள்ளது என்று தெரியாது போயுள்ளது.
இந்த நிதி முறைகேடுகளுக்கு பின்னால் மாவட்டத்தின் உயர்நிலை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் துணையாக இருந்து வருவதுடன் பொருளாளர் செயலாளர் தலைவர் உள்ளிட்ட தனிப்பட்ட சிலரே இதன்மூலம் நிதிகளை கொள்ளையிட்டு நன்மையடைந்து வருகின்றனர் இது தொடர்பான சில ஆவணங்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
முறையற்ற நிதி முறைகேடுகள் தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளாகிய நாங்கள் தங்களை தயவாக கோரி நிற்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளதுடன் இதன் பிரதிகளை ஆணையாளர் நாயகம் கமநல அபிவிருத்தி திணைக்களம் ஆளுனர் வடக்குமாகானம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட அரச அதிபர் இலஞ்ச ஊழல்கள் விசாரணைப்பிரிவு என்பவற்றுக்கும் பிரதியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

