நுவரெலியாவில் பெய்த பலத்த மழையினால் போக்குவரத்துக்கு இடையூறு மற்றும் விவசாய நிலங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை (27) நண்பகல் 12 மணியளவில் மின்னலுடன் கூடிய பலத்த மழை ஆரம்பித்து பல மணி நேரம் நீடித்தது.
இதன் காரணமாக நுவரெலியா, மீபிலமான, கந்தப்பளை, பொரலந்த, ஹாவாஎலிய மற்றும் சாந்திபுர ஆகிய பிரதேசங்களில் விவசாய நிலங்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
அத்துடன், நுவரெலியா பதுளை பிரதான வீதியில் சிபெட்கோ எரிபொருள் நிலையத்திற்கு முன் பகுதி வெள்ளத்தில் மூழ்கியதால் குறித்த வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் தரித்து நின்றமை குறிப்பிடத்தக்கது.
இதில் நுவரெலியா கண்டி ,நுவரெலியா ஹட்டன் போன்ற பல பிரதான வீதிகளும் வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, எதிர்வரும் நாட்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.
பலத்த மழை பெய்யும் காலங்களில், ரதெல்ல குறுக்கு வீதி உள்ளிட்ட செங்குத்தான சரிவுகள் உள்ள பகுதிகளில் வாகனங்களில் பயணிக்கும்போது கவனமாக இருக்குமாறு நுவரெலியா போக்குவரத்து பொலிஸ் சாரதிகளை கேட்டுக் கொண்டுள்ளது.









