யுத்தத்தால் தோற்றம் பெற்ற பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வினை பெற்றுக்கொடுப்போம் என்கிறார் அநுரகுமார திசாநாயக்க

60 0

இந்த நாட்டில் பொதுவான பிரச்சினைகள் காணப்படுகின்ற நிலையில் வடக்கு மக்களுக்கு பிரத்தியேகமான பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும்  யுத்தத்தால் தோற்றம் பெற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. யுத்தத்தால் தோற்றம் பெற்ற பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வினை பெற்றுக்கொடுப்போம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

யுத்தம் மற்றும் பாதுகாப்பு காரணிகளை குறிப்பிட்டுக்கொண்டு  மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. விடுவிக்க கூடிய அனைத்து காணிகளையும் விடுவிப்பேன். அவரவர் காணிகள் அவரவருக்கு வழங்கப்படும். விசேட கருத்திட்டத்தின் ஊடாக வடக்கு மாகாணத்தில் காணப்படும் வீட்டு பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுப்போம். இடைநிறுத்தத்தப்பட்ட அபிவிருத்தி பணிகளை மீள ஆரம்பிப்போம். முல்லைத்தீவு வட்டுவாக்கல் பாலம் நிர்மாணிப்பு பணிகளை அடுத்த மாதம் ஆரம்பிப்போம் எனவும் ஜனாதிபதி   உறுதியளித்தார்.

புதுக்குடியிருப்பு பகுதியில்  சனிக்கிழமை (26) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில்  மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

எனது அரசியல் பயணத்தில் நேற்று தான் முதன்முறையாக புதுக்குடியிறுப்பு பகுதியில்  தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளேன்.அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

வடக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது நம்பிக்கை கொண்டு வாக்களித்துள்ளார்கள்.அதற்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றசபைத் தேர்தலில் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பார்கள்.பழைய அரசியல்வாதிகள் தமிழ் – சிங்கள மக்களை பிரித்தார்கள்.

வடக்கு மக்கள் வடக்கு தமிழ் அரசியல் தலைவர்களை தெரிவு செய்தார்கள். தெற்கு மக்கள் சிங்கள அரசியல் தலைவர்களை தெரிவு செய்தார்கள். கிழக்கு மாகாண மக்கள் முஸ்லிம் அரசியல் தலைவர்களை தெரிவு செய்தார்கள்.

இருப்பினும் இம்முறை நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத்தேர்தலிலும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்கள் தேசிய மக்கள் சக்தியை தெரிவு செய்தார்கள்.

ஒன்றிணைந்து செயற்பட்டால் மாத்திரமே எதிர்காலத்தை  கட்டியெழுப்ப முடியும். தேசிய மக்கள் சக்தி அனைத்து இன மக்களும் கௌரவமாகவும் அவரவரின் உரிமைகளுடன் வாழும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.

மொழி,கலாச்சாரம் என்ற அடிப்படையில் எவரையும் வேறுப்படுத்த போவதில்லை. இந்த நாட்டில் தமிழர்கள், சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் சமவுரிமையுடன் வாழ்வதற்கு உரிமையுண்டு.

இந்த நாட்டில் பொதுவான பிரச்சினைகள் காணப்படுகின்ற நிலையில் வடக்கு மக்களுக்கு பிரத்தியேகமான பல பிரச்சினைகள் காணப்படுகின்றன.

30 ஆண்டுகால யுத்தத்தால் இந்த மாகாணத்தின் அபிவிருத்தி பின்னடைந்தது. யுத்தத்தால் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றன. யுத்தம் முடிவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தோற்றம் பெற்ற பிரச்சினைகள் இன்றும் உள்ளன.

யுத்தத்தால் தோற்றம் பெற்ற பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வினை பெற்றுக்கொடுப்போம்.யுத்தம் மற்றும் பாதுகாப்பு காரணிகளை குறிப்பிட்டுக்கொண்டு  மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

விடுவிக்க கூடிய அனைத்து காணிகளையும் விடுவிப்பேன். அவரவர் காணிகள் அவரவருக்கு வழங்கப்படும்.விசேட கருத்திட்டத்தின் ஊடாக வடக்கு மாகாணத்தில் காணப்படும் வீட்டு பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொடுப்போம்.

இடைநிறுத்தத்தப்பட்ட அபிவிருத்தி பணிகளை மீள ஆரம்பிப்போம். முல்லைத்தீவு வட்டுவாக்கல் பாலம் நிர்மாணிப்பு பணிகளை அடுத்த மாதம் ஆரம்பிப்போம்.

அதற்கு 1000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கொக்கிளாய் பாலத்தை நிர்மாணிப்போம். பாலம் அபிவிருத்தி செய்யப்பட்டால் முல்லைத்தீவு – திருகோணமலை போக்குவரத்து சேவை இலகுப்படுத்தப்படும். அதற்கு அடுத்த ஆண்டு மானியம் ஒதுக்கப்படும்.

அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.கொக்கிளாய் மற்றும் சாலை பாலம் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கப்படும்.

இந்த மாகாணத்தை நாங்கள் அபிவிருத்தியால் கட்டியெழுப்புவோம். வடக்கு மாகாண வீதி அபிவிருத்திக்கு 5000 மில்லியன்  ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் 1000 மில்லியன் ரூபா முல்லைத்தீவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஏழ்மை ஒழிக்கப்படும். விவசாயத்துறையை மேம்படுத்த உரிய திட்டங்கள் அமுல்படுத்தப்படும்.

விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட தயாராயின் அதற்கான காணிகள் வழங்கப்படும். வடக்கு மாகாணத்தை சகல துறைகளிலும் அபிவிருத்தி செய்வோம் என்றார்.