சைவ மக்கள் சார்பில் பாப்பரசர் பிரான்சிஸின் ஆத்ம ஈடேற்றத்திற்கு இறை பிரார்த்தனை

86 0
நாட்டிலுள்ள சைவ மக்கள் சார்பில் பாப்பரசர் பிரான்சிஸின் ஆத்ம ஈடேற்றத்திற்கு இறை பிரார்த்தனை செய்வதாக இந்துக் குருமார் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்துக் குருமார் அமைப்பின் செயலாளர் சிவஸ்ரீ. ச. சாந்தரூப குருக்கள் இன்று சனிக்கிழமை (26) கொழும்பில் உள்ள வத்திக்கான் தூதரகத்திற்கு விஜயம் செய்து நித்திய இளைப்பாறிய  பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு இந்துக் குருமார் அமைப்பின் செயலாளர் சிவஸ்ரீ. ச. சாந்தரூப குருக்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவு குறித்து இந்துக் குருமார் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பாப்பரசர் பிரான்சிஸின் மறைவு குறித்து மிகவும் கவலை அடைந்தோம்.

பாப்பரசர் பிரான்சிஸ் மதம் , இனம் மற்றும் மொழி ஆகியவற்றை கடந்து அன்பினை நேசித்தவராகவும் மனிதப்பண்பினை மதித்தவராகவும் விளங்கினார்.

இலங்கையில் உள்ள சைவ மக்கள் சார்பில் பாப்பரசர் பிரான்சிஸின் ஆத்ம ஈடேற்றத்திற்கு இறை பிரார்த்தனை செய்கிறோம். துயரடைந்துள்ள அன்புள்ளங்களுக்கு எமது ஆறுதலை பகிர்ந்து கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.