விசேட தேவையுடையவர்களுக்கான அணுகல் வசதி தொடர்பான ஆய்வு அறிக்கை யாழில் வெளியீடு

78 0

தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) ஏற்பாட்டில், இலங்கைக்கான ஆஸ்திரேலியா உயர்ஸ்தானியராலயத்தின் நிதி அனுசரணையுடன் பங்குபற்றல், பரிந்துரைத்தல், குரல் கொடுத்தல், வலுவூட்டல் (PAVE) எனும் தொனிப்பொருளில், யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள வாக்குச் சாவடிகளில் இயலாமைகளைக் கொண்ட நபர்களுக்கான அணுகல் வசதி தொடர்பான ஆய்வு அறிக்கை வெளியீடு புதன்கிழமை (23)  யாழ்ப்பாண நகர்ப்பகுதியிலுள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இச் செயற்பாடு PAVE செயற்திட்ட இளைஞர் குழுவின் ஒர் சமூக பரிந்துரை முன்னெடுப்பு முயற்சியாகும். ஆய்வறிக்கையின் முதற்பிரதியினை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பெற்றுக்கொண்டு உரையாற்றுகையில்,

யாழ். மாவட்டத்தில் தேர்தல்களின் போது இயலாமைகளைக் கொண்ட நபர்களுக்கான விசேட ஆயத்தங்கள் துறை சார் திணைக்களங்கினால் மேற்கொள்ளப்பட்டு வருவதனையும், மேலும் எவ்வாறு மாற்றுத்திறனாளிகளின் சமூக பொருளாதார உள்ளடக்கம் பற்றியும் கருத்துக்களை வழங்கியிருந்தார்.

விசேட தேவையுடைய நபர்களுக்கான உள்ளடங்கலான தேர்தல் வசதிப்பாடுகளின் முன்னேற்றம் குறித்து பங்குதாரர்களால் கலந்துரையாடப்பட்டது. மேலும் ஆய்வின் முக்கிய பரிந்துரைகள் துறை சார் அதிகாரிகளிடம் இளைஞர் குழுவினால் முன்வைக்கப்பட்டு அதற்கான தீர்வுகள் சாத்தியக்கூறுகள் பற்றியும் ஆராயப்பட்டன.

இந் நிகழ்வில் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர், ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதியின் வட பிராந்திய அலுவலகத்தின் கள ஒருங்கிணைப்பு அலுவலர், யாழ் பல்கலைக்கழக சட்டத்துறை தலைவர், யாழ் மாவட்ட தேர்தல் ஆணைக்குழுவின் உதவி ஆணையாளர், இயலாமைகளை கொண்ட நபர்களுக்காக பணிபுரியும் அமைப்புக்கள், IFES நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட அலுவலர் துறைசார் அரச அதிகாரிகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.