மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சியமைப்பதற்கான பொறுப்பை அவர்களிடமே ஒப்படைக்க வேண்டும்

105 0

உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் கிடைக்கும் பதிலின் அடிப்படையில் மக்கள் எதிர்பார்க்கும் வகையில் நாட்டில் ஆட்சியை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். அதற்குரிய சூழலை உருவாக்குவதற்கான பொறுப்பினை மக்களிடமே ஒப்படைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் புதன்கிழமை (23) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் எம்மை விட நாட்டு மக்கள் நன்கு அறிவர். ட்ரம்ப்பின் வரி அதிகரிப்பு தொடர்பில் நாடு என்ற ரீதியில் நாம் எவ்வாறான தீர்மானங்களை எடுக்கப் போகின்றோம் என்பதே முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏற்றுமதி பொருளாதாரத்தையும் தொழில் வாய்ப்புக்களையும் பாதுகாத்துக் கொள்வது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

வெறுமனே பேசிக் கொண்டிருக்காமல் நாட்டை முன்னேற்றுவதற்கான வேலைத்திட்டங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து சிந்திக்க வேண்டும். மக்கள் தமது வாழ்க்கையை எவ்வாறு முன்கொண்டு செல்வது என்ற போராட்டத்தை எதிர்கொண்டுள்ளனர். அந்த வகையில் மக்களை எவ்வாறு பாதுகாப்பது என்பதற்கே அரசாங்கம் முன்னுரிமையளிக்க வேண்டும்.

இன்னும் 10 நாட்களில் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் கிடைக்கும் பதிலின் அடிப்படையில் மக்கள் எதிர்பார்க்கும் வகையில் நாட்டில் ஆட்சியை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். அதற்குரிய சூழலை உருவாக்குவதற்கான பொறுப்பினை மக்களிடமே ஒப்படைக்க வேண்டும்.

ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை தொடர்ந்தும் கிடைக்க வேண்டுமெனில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நாம் இணங்கியவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும். எனவே இந்த பிரச்சினையை எவ்வாறு தீர்த்துக் கொள்வது என்பது குறித்து அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என்றார்.