இலங்கை வளர்வதற்கு இடமளிக்கவேண்டும் என்கிறார் முன்னாள் வெளிவிவகார அமைச்சர்

67 0

அமெரிக்காவினால் விதிக்கப்பட்டிருக்கும் தீர்வைகள் வெறும் இலக்கங்கள் மாத்திரமல்ல. மாறாக அவை அபிவிருத்தி எனும் ஏணியில் ஏறமுயலும் நாடுகளின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதாரம் விரிவடைந்தால், அதனூடாக அமெரிக்கா அதிகளவு பயனைப் பெறமுடியும். இருப்பினும் அதற்கு, முதலில் இலங்கை போன்ற நாடுகள் வளர்ச்சியடைவதற்கு அமெரிக்கா இடமளிக்கவேண்டும் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.

அமெரிக்காவினால் புதிதாக விதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதித்தீர்வைகள் தொடர்பில் மேற்கண்டவாறு கருத்துரைத்திருக்கும் அவர், இதுபற்றி மேலும் கூறியிருப்பதாவது:

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகத்தினால் இலங்கையின் ஏற்றுமதிகள் மீது விதிக்கப்பட்டு, தற்போது இடைநிறுத்தப்பட்டிருப்பினும் இன்னமும் முழுமையாக நீக்கப்படாத 44 சதவீத தீர்வையானது பொருளாதார யதார்த்தங்களைப் புறந்தள்ளி, இலக்கங்களை அடிப்படையாகக்கொண்டு வகுக்கப்படும் கொள்கைக்கு சிறந்த உதாரணமாகும்.

பொருட்கள் சார்ந்து பதிவாகியிருக்கும் வர்த்தகப்பற்றாக்குறையே இதற்கான பதிலாக இருக்கிறது. ஆனால் யதார்த்தத்தை புறந்தள்ளி மேற்கொள்ளப்படும் குறுகிய தீர்மானங்களால் இரு நாடுகளும் பாதிப்படையும் என்பதே உண்மை.

இலங்கை 4000 டொலர்களை தலா மொத்த உள்நாட்டு உற்பத்தியாகக்கொண்ட அபிவிருத்தியடைந்துவரும் நாடாகும். இருப்பினும் அமெரிக்காவின் தலா மொத்த உள்நாட்டு உற்பத்தி 80,000 டொலர்களாகும்.

எனவே இருநாடுகளுக்கும் இடையில் நிலவும் இந்த இடைவெளியானது மற்றைய நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச்செய்யத்தக்க கொள்கைகள் உருவாக்கப்படுவதை ஊக்குவிக்கவேண்டுமே தவிர, பிறிதொரு நாட்டைத் தண்டிக்கும் வகையில் அமையக்கூடாது.

இலங்கை அமெரிக்காவிடமிருந்து பொருட்களைக் கொள்வனவு செய்வதை விட அதிகளவு பொருட்களை அமெரிக்காவுக்கு விற்பனை செய்கிறது. இது இருநாடுகளுக்கும் இடையிலான மொத்தக் கொடுக்கல், வாங்கல்களின் ஓரங்கம் மாத்திரமேயாகும்.

இருப்பினும் தொழில்நுட்பம், கல்வி உள்ளிட்ட சேவைகள், முதலீட்டு வருமானம், வெளிநாட்டுப்பணவனுப்பல்கள் உள்ளிட்டவை மேற்படி பொருட்கள்சார் வர்த்தகப்பற்றாக்குறையில் சேர்க்கப்படுவதில்லை.

இலங்கையின் வரவு, செலவுத்திட்டத்தில் பெரும்பகுதி நிதி அமெரிக்க வங்கிகளிடமுள்ள பிணைமுறிகளுக்கான வட்டிக்கொடுப்பனவுக்கும், பல்தேசிய வங்கிகளிடம் பெற்ற கடன்களை மீளச்செலுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகிறது.

அதேபோன்று இலங்கை வாடிக்கையாளர்கள் பலர் டிஜிட்டல் சேவைகள், கடனட்டை கட்டணம் உள்ளடங்கலாகப் பல்வேறு தேவைகளுக்காக அமெரிக்க நிறுவனங்களுக்குப் பணம் செலுத்துகிறார்கள்.

அதுமாத்திரமன்றி அமெரிக்க பல்கலைக்கழகங்கள், வைத்தியசாலைகள் போன்றவற்றுக்கும் இலங்கையர்கள் அதிக பணத்தை செலவிடுகின்றனர்.

இவ்வாறு இலங்கையிலிருந்து வெளிப்பாய்ச்சல் அடையும் பணம் பெரும்பாலும் அமெரிக்காவுக்கே செல்கிறது. ஆகையினால் இங்கு இலங்கை நியாயமற்ற முறையில் எந்தவொரு நன்மையையும் பெறவில்லை.

அவ்வாறிருக்கையில் அமெரிக்காவினால் விதிக்கப்பட்டிருக்கும் தீர்வைகள் வெறும் இலக்கங்கள் மாத்திரமல்ல. மாறாக அவை அபிவிருத்தி எனும் ஏணியில் ஏறமுயலும் நாடுகளின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இலங்கை போன்ற நாடுகளின் பொருளாதாரம் விரிவடைந்தால், அங்கு நிலையான சந்தைகள் உருவாகும். அதன்மூலம் கேள்வி அதிகரிக்கும். எனவே அமெரிக்காவிடமிருந்து மேலும் அதிகமாகக் கொள்வனவு செய்யமுடியும்.

அதற்கு முதலில் அந்நாடுகள் வளர்ச்சியடைவதற்கு இடமளிக்கவேண்டும். வொஷிங்டனில் இருப்பவர்களில் யாரேனும் நீண்டகால அடிப்படையில் சிந்திப்பார்கள் என நம்புவோம் என்றார்.