தபால் மூல வாக்களிப்பின் போது அரச உத்தியோகத்தர்கள் சிந்தித்து தீர்மானங்களை எடுக்க வேண்டும்

64 0

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டுக்கமைய அரச சேவையில் சுமைகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளையே அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. தபால் மூல வாக்களிப்பின் போது அரச உத்தியோகத்தர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

செவ்வாய்கிழமை (22) ஐக்கிய மக்கள் சக்தி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரி யார் என்பது வெளிப்படுத்தப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் தற்போது அதற்கு இன்னும் கால அவகாசம் தேவையென்கின்றனர். இதுவும் மக்களை ஏமாற்றுமொரு நாடகமாகும்.

அரசாங்கத்தின் பொய்களை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளதால் தான் இன்று ஜே.வி.பி. ஆடையணிந்த இளைஞர்களையோ, ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட முச்சக்கர வண்டிகளையோ காண முடியாதுள்ளது.

இதற்கு முன்னர் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக பொய் கூறினர். எதிர்பார்த்ததைப் போன்று அதிகாரம் கிடைத்துள்ளது. அவ்வாறெனில் இனியாவது பொய் கூறுவதை நிறுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

செய்ய முடியாதவற்றை தவிர்த்து செய்யக் கூடியவற்றை மக்களிடம் சென்று கூறுங்கள். தேர்தலுக்கு முன்னர் அரச உத்தியோகத்தர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினர். ஆனால் தற்போது அவர்களை அச்சுறுத்துகின்றனர்.

அரச உத்தியோகத்தர்கள் இதனைப் புரிந்து கொள்ள வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டுக்கமைய அரச சேவையில் சுமைகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளையே அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

தபால் மூல வாக்களிப்பின் போது அரச உத்தியோகத்தர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும். இந்த அரசாங்கம் ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் ஒரு முதலீட்டாளரேனும் நாட்டுக்கு வந்துள்ளாரா? 6 மாதங்களில் கிடைத்துள்ள முதலீட்டு தொகையைக் கூற முடியுமா?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு வழங்க முன்னரே, 21ஆம் திகதி பிரதான சூத்திரதாரியை வெளிப்படுத்துவோம் என ஜனாதிபதி குறிப்பிட்டமை பொய்யல்லவா? எவ்வாறேனும் இதற்கு ஒரு முடிவு வேண்டும். பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும் என்றார்.