அமெரிக்காவின் மிகவும் இரகசியமான போர்தந்திரோபாயங்களை பாதுகாப்பு செயலாளர் பீட்டே ஹெக்செத் சமூக ஊடக குழு உரையாடலில் பகிர்ந்துகொண்டார் என மீண்டும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் மீதான தாக்குதல் திட்டங்களை சமூக ஊடக குழு உரையாடலில் பகிர்ந்துகொண்டார் என கடந்த மாதம் அமெரிக்க பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் வெளியாகியிருந்தன. இந்த குற்றச்சாட்டுகளால் டிரம்ப் நிர்வாகம் பெரும் நெருக்கடியை சந்தித்தது.
இந்த நிலையில் மீண்டும் அதே தவறை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் செய்துள்ளார் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன..
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மிகவும் இரகசியமான விடயங்களை தனது மனைவி சகோதரர் மற்றும் தனது சட்டத்தரணியுடன் பகிர்ந்துகொண்டார் என குற்றச்hட்டுகள் வெளியாகியுள்ளன.
சிக்னல் செயலி மூலம் அனுப்பப்பட்ட இந்த தகவல்கள் யேமனின் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் மீதான தாக்குதல்கள் குறித்தவை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சமூக ஊடக உரையாடல் குழுவில் பலர் காணப்பட்டனர் அவர்களை இந்த தகவல்கள் சென்றடைந்திருக்கவேண்டும் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த குழுவில் 13 பேர் காணப்பட்டனர்,பாதுகாப்பற்ற தொடர்பாடல் அமைப்பினை பயன்படுத்துவது குறித்து உதவியாளர் எச்சரித்த போதிலும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் அதனை பயன்படுத்தினார் என விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பொக்ஸ் நியுசின் முன்னாள் செய்தியாளரான பாதுகாப்பு செயலாளரின் மனைவி ஜெனிபர் மிகவும் இரகசியமான இந்த கலந்துரைடயாலில் கலந்துகொண்டார், எனதகவல்கள் வெளியாகியுள்ளன.

