இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து சீனா மாத்திரம் அன்றி பல நாடுகளும் கூடுதல் அவதானம் செலுத்தி இருந்தன. இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தில் சீன ஆய்வுக் கப்பல்கள் தொடர்பான சிறப்பு சரத்து ஒன்று சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியதை தொடர்ந்து நிலைமை சூடுப்பிடித்துள்ளது. அதாவது இலங்கைக் கடற்பரப்பில் சீன ஆய்வுக் கப்பல் வருவதாயின் இந்தியாவின் அனுமதி பெற வேண்டும் என்ற சரத்து உள்ளடக்கப்பட்டுள்ளதாகவே தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் இதன் உண்மை நிலைமை குறித்தும் இலங்கை – இந்திய பாதுகாப்ப ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் குறித்தும் இதுவரையில் முழுமையாக வெளிப்படுத்தப்பட வில்லை. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சீன விஜயத்திற்கு முன்னர், சீன ஆய்வுக் கப்பல் நாட்டின் கடல் எல்லைக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் சீன ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்குள் பிரவேசித்த போதிலும், இந்தியாவின் பாரிய அழுத்தத்தினால் சீன ஆய்வுக் கப்பல்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு வருட காலத்திற்கு தடை விதித்திருந்தார்.
இந்த தடையானது சீன நாட்டின் கௌரவத்துடன் தொடர்புப்பட்டுள்ளதாக சீனா கடுமையாக விமர்சித்திருந்தது. எனவே, ஜனாதிபதி அநுரவின் சீன விஜயத்தின் போது, ஆய்வுக்கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதற்கான அனுமதி கோரிக்கையை சீனாவினால் முன்வைக்கப்பட்டது.
சீனாவின் பெருமைக்கும் கௌரவத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தேவையான அனுமதியை வழங்குமாறு இலங்கை வாக்குறுதி அளித்திருந்தது.
ஆனால், அந்த வாக்குறுதியை இதுவரையில் அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்பது சீனாவின் முக்கிய கவலைகளில் ஒன்றாக உள்ளது. இதன்படி, இலங்கைக் கடற்பரப்பிற்குள் எந்தவொரு சீன ஆய்வுக் கப்பலும் பிரவேசிப்பதைத் தடுக்கும் தடை இன்னும் அமுலில் உள்ளதாகவே தெரிகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில், அமெரிக்க ஜனாதிபதி டொனல் டிரம்ப் விதித்த அதீத பொருளாதாரத் தடைகளால் உருவான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பொருளாதாரப் போரை எதிர்கொண்டுள்ள ஆசியாவின் அனைத்து நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சீனத் தூதுவர்களை கடந்த வாரம் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் பெய்ஜிங்கிற்கு அழைத்திருந்தார்.
சீன ஜனாதிபதிக்கும் சீனத் தூதுவர்களுக்கும் இடையில் மிக முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், ஜனாதிபதி ட்ரம்பின் வரிவிதிப்பு தொடர்பில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து இதன் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் வரிப்பணத்தினால் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நாடுகளுக்கு சீனா எவ்வாறு உதவ வேண்டும் என்பன தொடர்பில் நீண்ட நேரம் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகிறது.
இக்கலந்துரையாடலில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கியூ ஷென்ஹொங் கலந்து கொண்டுள்ளதுடன், இலங்கையின் நிலைமை குறித்து நீண்ட விளக்கமளித்துள்ளார். இதன்படி, அண்டை நாடுகளுடன் எவ்வாறு கொள்கைகளை பரிமாறிக்கொள்வது மற்றும் அண்டை நாடுகளுக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் புதிய பொருளாதார யோசனை திட்டங்கள் குறித்து இலங்கை, பாக்கிஸ்தான் மற்றும் பங்களதேஷ் உட்பட ஆசிய நாடுகள் பலவற்றுடன் சீன பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. குறிப்பாக அமெரிக்க வரி கட்டணங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நாடுகளை குறிவைத்து சீன ஜனாதிபதி விஜயங்களை ஆரம்பித்துள்ளார். அதன்படி, மலேசியா, கம்போடியா, வியட்நாம் போன்ற நாடுகளுக்கான விஜயங்களை ஏற்கனவே நிறைவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

