ரூ.30 லட்சம் மோசடி புகார்: அமைச்சர் காமராஜ் மீது வழக்கு பதிவு

226 0

ரூ.30 லட்சம் மோசடி புகாரில் அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடி போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் குமார் உணவு துறை அமைச்சர் காமராஜ் மீது பரபரப்பான குற்றச்சாட்டு கூறி இருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-

நான் சென்னையில் சொந்தமாக ஒரு வீடு வாங்கினேன். அந்த வீட்டில் ஏற்கனவே வசித்து வந்தவர் வெளியேற மறுத்து காலதாமதம் செய்து வந்தார்.இதையடுத்து வீட்டில் இருப்பவரை வெளியேற்ற அமைச்சர் காமராஜின் உதவியை நாடினேன். இதற்காக அமைச்சர் காமராஜுக்கு ரூ.30 லட்சம் கொடுத்தேன்.

ஆனால் உறுதியளித்தப்படி வீடு விவகாரத்தை அமைச்சர் காமராஜ் முடித்து கொடுக்கவில்லை. இதைத் தொடர்ந்து ரூ.30 லட்சம் பணத்தை திருப்பிக் கேட்டேன்.ஆனால் அமைச்சர் காமராஜ் பணத்தை திருப்பிக் கொடுக்கவில்லை. அதோடு அவர் என்னை மிரட்டினார்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இதுபற்றி 2011-ம் ஆண்டு மன்னார்குடி டி.எஸ்.பி.அறிவானந்தத்திடம் குமார் புகார் செய்தார். சென்னை ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ஐகோர்ட்டு 2015-ம் ஆண்டு முடித்து வைத்ததால் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

கடந்த வாரம் இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அப் போது அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதைத் தொடர்ந்து அமைச்சர் காமராஜ் மீது உரிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழக போலீசார் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது அமைச்சர் காமராஜ் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.இது தொடர்பாக நீதிபதிகள் மேலும் கூறும் போது, “அமைச்சர் என்றால் சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டவர் என்று அர்த்தமா? அவர் சட்டத்துக்கும் மேலானவரா? அவரும் சட்டத்துக்கு உட்பட்டவர்தான். அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என்று கேள்வி எழுப்பினர்.

அப்போது அமைச்சர் காமராஜ் சார்பில் ஆஜரான தமிழக அரசு வக்கீல், “மனுதாரர் மீது இது தொடர்பாக மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார். அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் “தமிழக அரசு நீதிமன்றத்தை தவறாக வழி நடத்துகிறது என்று குற்றம் சாட்டினர்.

அமைச்சர் காமராஜிடம் தமிழக போலீசார் உடனடியாக விசாரணை நடத்தி 8-ந்தேதிக்குள் கோர்ட்டில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து மன்னார்குடி போலீசார் அமைச்சர் காமராஜ் மீது மோசடி வழக்கு பதிவு செய்தனர்.இது தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு கடந்த 2015-ம் ஆண்டு ஐகோர்ட்டில் முடித்து வைக்கப்பட்ட நிலையில் சுப்ரீம்கோர்ட்டு தற்போது அதை கையில் எடுத்துள்ளது.சுப்ரீம்கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து 6 ஆண்டுக்கு பிறகு அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.2016-ம் சட்டசபை தேர்தலின் போது நன்னிலம் தொகுதியில் அமைச்சர் காமராஜை எதிர்த்து குமார் மனுதாக்கல் செய்தார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.