முஷரப் வக்கீலுக்கு பாகிஸ்தான் கோர்ட் கேள்வி

236 0

நாட்டை விட்டு தப்பிச் சென்ற தலைமறைவு குற்றவாளி பர்வேஸ் முஷரப்புக்கு ஆதரவாக வாதாட அனுமதி அளிக்க முடியாது என்று பாகிஸ்தான் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் மீது அந்நாட்டு அரசு தேசத்துரோகம் உள்பட பல வழக்குகளை தொடர்ந்துள்ளது. இதனால் அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், சிந்து மாகாண ஐகோர்ட்டு, முஷரப் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடையை கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் நீக்கியது.

இதை எதிர்த்து, பாகிஸ்தான் அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. அப்பீல் மனுவில், முஷரப் மீது, தேசத்துரோக வழக்கு தவிர மேலும் பல வழக்குகள் இருப்பதால், வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இருந்து அவரது பெயரை நீக்கக்கூடாது என்று கூறி இருந்தது.

இந்த அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதி நசிருல் முல்க் தலைமையிலான 5 நீதிபதிகளை கொண்ட அமர்வு, முஷரப் வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடையை நீக்கி சிந்து ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், அவர் மீதான வழக்குகள் விசாரணை முடிவும் வரை அவர் வெளிநாடு செல்ல தடை நீடிக்கும் என்றும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முஷரப் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் முஷரப் வெளிநாடு செல்வதற்கு அரசு விதித்துள்ள தடையை நீக்குமாறு உத்தரவிட்டது.

இதையடுத்து, முஷரப் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு அவரது வக்கீல்கள் அரசிடம் கோரிக்கை வைத்தனர். இதற்கு அரசும் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18-ம் தேதி கராச்சி நகரில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் முஷரப் புறப்பட்டு சென்றார்.

இருமாதகால சிகிச்சைக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு திரும்பி வருவதாக கூறிச்சென்ற முஷரப், கடந்த ஓராண்டுக்கும் மேலாக வெளிநாட்டிலேயே தங்கியுள்ளார். தேசத் துரோகம், பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அரசியல் எதிரிகளை பழிதீர்த்தது உள்பட பாகிஸ்தான் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள எந்த வழக்கின் விசாரணைக்கும் அவர் ஆஜராகவில்லை.

இந்நிலையில், பெனாசிர் பூட்டோ கொலை வழக்கு மற்றும் வருமானத்துக்கும் அதிகமாக சொத்து குவித்த வழக்கு ஆகியவை நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது முஷரப்பின் சார்பில் ஆஜரான அவரது வக்கீல், எனது கட்சிக்காரருக்கு தேவையான மருத்துவ சிகிச்சை வசதிகள் பாகிஸ்தானில் இல்லை. எனவே, அவர் வெளிநாட்டில் தங்கியிருக்க அனுமதி அளிக்க வேண்டும் என நீதிபதிகளிடம் கேட்டுக்கொண்டார்.

அவர் மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்ப வேண்டுமானால், அவரது உயிரை பாதுகாக்க தேவையான உச்சகட்ட பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். இதை கேட்டு கடுப்பாகிப் போன நீதிபதிகள், நாட்டை விட்டு தப்பிச் சென்ற தலைமறைவு குற்றவாளி பர்வேஸ் முஷரப்புக்கு ஆதரவாக வாதாட அனுமதிக்க முடியாது என்று முஷரப்பின் வக்கீலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன் இந்த வழக்கின் மறுவிசாரணையை வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும், முஷரப்புக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2008-ம் ஆண்டு அவரது ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட சொத்து மதிப்பீட்டு தொகையை கருத்தில் கொள்ளவும் கோர்ட் மறுத்து விட்டது.

முஷரப்புக்கு சொந்தமான சொத்துகளின் இன்றைய மதிப்பு என்ன? என்பதை கணக்கிட்டு அடுத்த விசாரணையின்போது அறிக்கை தாக்கல் செய்யுமாறு அரசு தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.