தமிழ் – சிங்கள புத்தாண்டு : தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு

95 0

தமிழ் – சிங்கள புத்தாண்டு சம்பிரதாயங்களுக்கு இணைவாக இடம்பெறும் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் அரச உற்சவம் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் ஸ்ரீ மகா நாத தேவால வளாகத்தில் புதன்கிழமை (16 ) காலை 9.04 க்கு சுப நேரத்தில் இடம்பெற்றது.

இம்முறை தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பாரம்பரிய அரச நிகழ்வை ஊடக அமைச்சு மற்றும் ஆயுர்வேத திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.

இந்நிலையில், கொலன்னாவை பண்டைய ரஜமஹா விகாரையில் புதன்கிழமை (16) நடைபெற்ற தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய பங்கேற்றார்.

ஆசிர்வாத பிரித் பாராயண நிகழ்வைத் தொடர்ந்து காலை 9.04 மணி சுப நேரத்தில், விகாரையின் தலைமை விகாராதிபதி சங்கைக்குரிய கொலன்னாவே தம்மிக்க தேரரின் தலைமையில், தலைக்கு எண்ணெய் தேய்க்கும் நிகழ்வு நடைபெற்றது.

இதன் போது நிகழ்வுக்கு வருகைதந்திருந்த பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்த பிரதமர், மேலும் தெரிவிக்கையில்,

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு எமது நாட்டின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இது எமது குடும்பத்தை மையமாகக் கொண்டு, எமது பாரம்பரியங்கள் மற்றும் உறவினர்களை நினைவில் கொண்டு கொண்டாடப்படும் ஒரு பண்டிகை.

இந்தப் பண்டிகையின் மூலம்தான் எமது ஒற்றுமை, அன்பு, பிணைப்பு அனைத்தும் புதுப்பிக்கப்படுகின்றன. இந்த நாட்டிற்கு தேவையானவையாகும்.

ஒரு நாட்டின் அபிவிருத்தி என்பது ஒருதலைப்பட்சமானது மட்டுமல்ல. உண்மையான  அபிவிருத்திக்கு எமது ஆன்மீகம், உறவுகள் மற்றும் பிணைப்புகள் அனைத்தும் முக்கியமானவை.

இத்தகைய பண்டிகைகளின் போது அவற்றை எமக்கு நினைவூட்டவும், அடுத்த தலைமுறையினருக்கு அவற்றின் முக்கியத்துவத்தை கற்பிக்கவும் இந்த பாரம்பரியங்களை நாம் பின்பற்றுகிறோம்.

எனவே, இது மிகவும் முக்கியமான நாள். இந்த வாரம் முழுவதும் நாங்கள் ஒன்றாக பல்வேறு விடயங்களைச் செய்தோம். அடுத்து, நாம் வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். இந்த நாட்டைக் கட்டியெழுப்பவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படத் தொடங்க வேண்டும்.

பிறந்திருக்கும் புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தரும், அனைத்து பிணைப்புகளையும் வலுப்படுத்தும், அனைவருக்கும் பாதுகாப்பான, மிகவும் வளமான மற்றும் அமைதியான புத்தாண்டாக அமைய வாழ்த்துகிறேன் என்றார்.

இந்த நிகழ்வில் மகா சங்கத்தினர் உட்பட இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, கொலன்னாவை பிரதேச செயலாளர் பிரியநாத் பெரேரா, நகரசபை செயலாளர் நெலும் குமாரி கமகே மற்றும் பிரதேச மக்கள் கலந்து கொண்டனர்.