விதப்புரைகள் நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் பொது மனுக்கள் குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானம்

62 0

பொது மனுக்கள் பற்றிய குழுவினால் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரில் வழங்கப்பட்ட 80 இற்கும் மேற்பட்ட விதப்புரைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படாத பாராளுமன்றக் குழுக்களின் விதப்புரைகளை ஒரு மாதத்துக்குள் நடைமுறைப்படுத்தவும் விதப்புரைகள் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து மதிப்பாய்வு செய்தற்காக குறித்த குழு தீர்மானித்துள்ளது.

பாராளுமன்றக் குழுக்களினால் வழங்கப்பட்டு இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு மாதகால அவகாசம் வழங்குவதற்கு, பாராளுமன்றக் குழுக்களின் விதப்புரைகள், சம்பந்தப்பட்ட பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களினால் அவை நடைமுறைப்படுத்தாமை தொடர்பில் மதிப்பாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தீர்மானித்துள்ளது.

இந்தக் குழு அதன் தலைவர் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் (சட்டத்தரணி) ஹர்ஷன நாயணக்கார தலைமையில் புதன்கிழமை  (09) பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.

அதற்கமைய, குழுவினால் முன்னுரிமை வழங்கப்பட்டு மதிப்பாய்வு செய்யப்படவேண்டிய, நடைமுறைப்படுத்தப்படாத விதப்புரைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், இதன்போது பொது மனுக்கள் பற்றிய குழுவினால் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது கூட்டத்தொடரில் வழங்கப்பட்ட 80க்கும் அதிகமான விதப்புரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டவில்லை என்பது புலப்பட்டது.

அத்துடன், அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (COPE), அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (COPA), அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) ஆகிய குழுக்களினால் வழங்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படாத விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்குவதற்கு குழுவினால் தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய, இவ்வாறு நடைமுறைப்படுத்தப்படாத விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு கடிதங்களை அனுப்புவதற்கும், ஒரு மாத காலத்துக்குள் நடைமுறைப்படுத்த முடியாது எனின் அதற்கான காரணங்களைக் குழுவுக்கு எழுத்துமூலமாகப் பெற்றுக்கொள்வதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க மற்றும் ஒஷானி உமங்கா ஆகியோரும் பாராளுமன்ற அதிகாரிகளும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.