சர்வதேச அரசியல் புரிதல் இல்லாவிட்டால் பேரழிவு – ஐ.தே.க.தவிசாளர் விஜிர

128 0

ஐக்கிய அமெரிக்காவினால் எமது நாட்டுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வரிக் கொள்கை போன்று சர்வதேசத்தினால் எமது நாட்டுக்கு விதிக்கப்படும் சவால்களுக்கு முகம்கொடுப்பாக இருந்தால் சர்வதேச அரசியல் தொடர்பில் தெளிவான புரிதல் இருக்க வேண்டும். நாட்டை ஆளும் கட்சிக்கு சர்வதேச அரசியல் தொடர்பில் தெளிவான புரிதல் இல்லாவிட்டால் விரைவாக நாடு பாரிய பேரழிவுக்கு பயணிக்குமென ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவுறுத்தும் கலந்துரையாடல் ஒன்று திருகோணமலை நகரசபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இன்றைக்கு இரண்டரை வருடங்களுக்கு முன்னர் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகிய நாட்டை ரணில் விக்ரமசிங்கவே இந்த நிலைமைக்கு கொண்டுவந்திருக்கிறார். இன்று ஐக்கிய அமெரிக்கா எமது நாட்டுக்கு பாரியதொரு தொகை வரியை விதித்திருக்கிறது. முழு உலகை பார்க்கும்போது ஒரு சில நாடுகளுக்கே இந்த நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

ரணில் விக்ரமசிங்க தற்போது இதுதொடர்பில் ஆராய்ந்து வருகிறார். அமெரிக்காவினால் விதிக்கப்பட்டிருக்கும் இந்த வரி கொள்கை தொடர்பிலும் அதனால் முழு உலகுக்கும் ஏற்படப்போகும் தாக்கம் தொடர்பாகவும் சில தினங்களுக்கு முன்னர் ரணில் விக்ரமசிங்க அறிவிப்போன்றை விடுத்திருந்தார்.

விசேடமாக இவ்வாறானதொரு நிலைமை ஏற்படுவதற்கு முன்னர் கடந்த 4,5 மாதங்களில் சர்வதேச அரசியல் தொடர்பில் சிறந்த ஆய்வுடன் செயற்படுவது அரசாங்கம் ஒன்றின் பொறுப்பாகும். அதற்காகத்தான் சர்வதேசத்துடன் கையாளுவது தொடர்பில் அனுபவம் முக்கியமாகிறது.

அதனால்தான் இந்திய பிரதமர் மோடி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது மிகவும் முக்கியமாகுமென ரணில் விக்ரமசிங்க ஆரம்பத்திலேயே அறிவித்திருந்தார். அவர் 2019ஆம் ஆண்டிலும் இலங்கைக்கு வந்திருந்தார். அப்போது சிலர் அவர் இலங்கைக்கு வரும்போது எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

அதேபோன்று எமது அயலவர், எமக்கு பிரச்சினை ஏற்பட்டால் எப்போதும் உதவி ஒத்தாசை வழங்கும் அரசாங்கம் என்வகையில் ரணில் விக்ரமசிங்கவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இராஜதந்திர ரீதியில் கைச்சாத்திட்டிருக்கும் ஒப்பந்தங்கள் தொடர்பில் இராஜதந்திர ரீதியில் கையாள வேண்டும்.

அவற்றை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் நாங்கள் சுமார் 2பில்லியன் அளவு முதலீடுகளை இந்திய அரசாங்கத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறோம். அவற்றை பாதுகாத்துக்கொண்டு முன்னுக்கு செல்ல வேண்டும் என்றார்.