அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரிகளின் பின்னணியில், ஏற்றுமதியாளர்களுக்கு அரசாங்கம் அவசர நிவாரணம் வழங்க வேண்டும். இந்த நெருக்கடி தேசிய ரீதியானது. இதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் மிகப்பெரியதாக இருக்கலாமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கலாநிதி ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளதாவது,
இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் வரை அவசர நிவாரண நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். ஏற்றுமதியாளர்களுக்கான எளிமைப்படுத்தப்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட வரி நீக்கத்தில் அடுத்த வாரம் திட்டமிடப்பட்ட திருத்தத்தை நிறுத்தி வைக்குமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
அமெரிக்க வரி அதிகரிப்பால் அதிகரித்து வரும் உலகளாவிய வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில் ஏற்றுமதியாளர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படாவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும். இந்த நெருக்கடி தேசிய ரீதியானது. இதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் மிகப்பெரியதாக இருக்கலாம்.
பாதுகாப்புவாதக் கொள்கைகளுக்குத் திரும்புவதற்குப் பதிலாக இலங்கை கட்டணச் சுவர்களை உடைத்து வர்த்தகப் பாலங்களைக் கட்ட வேண்டும்.
இலங்கை பெரிய வர்த்தக மற்றும் முதலீட்டு சீர்திருத்தங்களை மேற்கொள்ளாவிட்டால், பிராந்தியத்துடனான ஒருங்கிணைப்பு எட்ட முடியாததாகவே இருக்கும் என்று பிம்ஸ்டெக் மாநாட்டிலும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொருட்கள் மற்றும் சேவைகளில் தாராளமயமாக்கலுக்கு நாம் உறுதியளிக்காவிட்டால் பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் ஒரு கனவாகவே இருக்கும். நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்துக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றோம் என்றார்.

