அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும். இதனை எமது குறுகிய அரசியலுக்கான நாங்கள் பயன்படுத்திக் கொள்ள போவதில்லை. தோற்றம் பெறும் பாதிப்புகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோமென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கை பொருளாதார பாதிப்பினை எதிர்கொண்டுள்ள பின்னணியில் இலங்கை மீது 44 சதவீத தீர்வை வரியை அமெரிக்கா விதித்துள்ளது. 2019ஆம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று தாக்கத்தின் போது நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி எமது அரசாங்கத்துக்கு கடும் அழுத்தம் பிரயோகித்தது.
கொரோனா பெருந்தொற்று தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை மக்கள் விடுதலை முன்னணியும், ஐக்கிய மக்கள் சக்தியும் தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்திக்கொண்டன.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அத்தியாவசிய பொருள் விநியோகம் திட்டமிட்ட வகையில் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டன.
அத்தியாவசிய பொருள் விநியோக தட்டுப்பாட்டால் மக்கள் அரசாங்கத்துக்கு எதிராக வீதிக்கு இறங்கினார்கள். மக்கள் விடுதலை முன்னணி ஜனநாயக போராட்டத்தை வன்முறையாக மாற்றியமைத்து இந்த நாட்டில் பாரிய நெருக்கடியை ஏற்படுத்தி இறுதியில் அரசியலில் வெற்றிப்பெற்றது.
அமெரிக்காவின் புதிய வரி விதிப்பால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும். இதனை எமது குறுகிய அரசியலுக்கான நாங்கள் பயன்படுத்திக் கொள்ள போவதில்லை. தோற்றம் பெறும் பாதிப்புகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

