பொருளாதார தாக்கங்களை குறைக்க அரசுடன் இணைந்து செயற்படுவோம்

91 0

இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா 44 சதவீத தீர்வை வரி விதித்துள்ளதால் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் ஒத்துழைப்பின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்டுள்ள நிதி கொள்கைக்கும் பாதிப்பு ஏற்படுமென இலங்கை வர்த்தக சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.

ஏற்படும் பொருளாதார தாக்கங்களை குறைப்பதற்கு ஒருங்கிணைந்த மற்றும் மூலோபாய திட்டத்தை வகுப்பதற்கு அரசாங்கத்துடன் இணக்கமாக செயற்படுவோம் என்று இலங்கை வர்த்தக சம்மேளனம்  உறுதியளித்துள்ளது.

அமெரிக்கா இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு 44 சதவீத தீர்வை வரி விதித்துள்ளமை தொடர்பில்  இலங்கை வர்த்தக சம்மேளனம்  விசேட  அறிக்கை ஒன்றை வெளியிட்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா புதிய தீர்வை வரியை விதித்துள்ளதால் இலங்கையின் பொருளாதார ஸ்திரப்படுத்தலுக்கு பாதிப்பு ஏற்படும். அமெரிக்க ஜனாதிபதியின் இந்த தீர்மானம் குறித்து கவலையடைந்துள்ளோம்.

இந்தத் தீர்வை குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு வருடாந்தம் 3 பில்லியன் டொலர்கள் பெறுமதியிலான பண்டங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.அது நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானத்தில் 25 சதவீதமாக காணப்படுகிறது.

அமெரிக்காவின் புதிய தீர்வை வரியினால் உலக சந்தை மற்றும் விநியோக வலையமைப்புக்கும் பாதிப்பு ஏற்படும். இந்த வரி விதிப்பு குறித்து ஆராய்ந்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய வகையில் குழு ஒன்றை நியமித்துள்ளமை வரவேற்கத்தக்கது.

சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட கடன் செயற்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய இலங்கையின் அமுல்படுத்தப்பட்டுள்ள நிதி கொள்கைக்கும் பாதிப்பு ஏற்படும்.

இலங்கையின் பொருளாதார ஸ்திரப்படுத்தலுக்கு ஏற்படும் பாதிப்பை  இழிவளவாக்குவதற்கு ஒருங்கிணைந்த மற்றும் மூலோபாய திட்டங்களை வகுப்பதற்கு அரசாங்கத்துடன் நெருக்கமாக செயற்பட தயாராகவுள்ளோம்.

இலங்கையின் ஏற்றுமதி துறையை வலுப்படுத்தவும், இராஜதந்திர மற்றும் கொள்கை சார்ந்த தீர்வுகளை வலுவாக பின்பற்றும் அதேவேளை, இலங்கையின் வர்த்தக நலன்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதில் ஒத்துழைக்குமாறு அனைத்து பங்குதாரர்களையும் கேட்டுக்கொள்கிறோம்.